விளாத்திகுளத்தில், திமுக கூட்டணி தலைமை தேர்தல் காரியாலயம் திறப்பு விழா!
மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடுகள் முடிந்து தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட வேட்பாளர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு ஏற்கனவே இங்கு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கனிமொழி கருணாநிதி மீண்டும் இந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பரப்புரை மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் என தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதையொட்டி, பாராளுமன்ற தேர்தல் - 2024 முன்னிட்டு விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் INDIA கூட்டணி தலைமை தேர்தல் காரியாலயம் திறப்பு விழா நடைபெற்றது. விளாத்திகுளம் அம்பாள் நகரில் நடைபெற்ற இவ்விழாவில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்துகொண்டு தலைமை தேர்தல் காரியாலயத்தை திறந்து வைத்தார்.

இதில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த திமுகவினர் மட்டுமின்றி INDIA கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும், இக்கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் பாராளுமன்ற தேர்தலில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதியை மீண்டும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற கடுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.




உங்கள் கருத்தை பதிவிடுக