எட்டையாபுரம் அருகே கார் மீது லாரி மோதி பெண் பலி - 5 பேர் படுகாயம்: விசாகத் திருவிழா முடிந்து திரும்பியபோது சோகம்.
திருச்செந்தூர் வைகாசி விசாகத் திருவிழா தரிசனத்தை முடித்துவிட்டு காரில் சொந்த ஊருக்குத் திரும்பிய பக்தர்கள் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில், பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பெண்கள் உட்பட ஐந்து பேர் பலத்த காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிவன்ஆண்டி மகன் சிவா (56), இவரது காரில் அதே பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் மனைவி லதா (43), சிவன்ஆண்டி மனைவி கலா (54), தேவா மனைவி ராஜேஸ்வரி (33) மற்றும் சுபேதன் (22) ஆகியோருடன், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ராஜ் மனைவி விஜயா (48) என்பவரும் இணைந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவிற்காக வந்துள்ளனர்.
நேற்று கோவிலில் சிறப்பான முறையில் சாமி தரிசனத்தை முடித்த ஆறு பேரும், அதே காரில் மீண்டும் நாகப்பட்டினத்திற்குப் புறப்பட்டுள்ளனர். காரை சிவா ஓட்டியுள்ளார். திருச்செந்தூரில் இருந்து நேற்று இரவு 10 மணியளவில் புறப்பட்ட இவர்களது கார், தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டையாபுரம் அருகே நள்ளிரவு 1 மணி அளவில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது எதிரே தூத்துக்குடி துறைமுகத்தை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த ஒரு கண்டெய்னர் லாரி, எதிர்பாராதவிதமாக இவர்களது கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் அப்படியே தலைகீழாகக் கவிழ்ந்து நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த சிவா உட்பட 6 பேரும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்து அலறினர். விபத்து நடந்தவுடன் கண்டெய்னர் லாரி டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
விபத்து குறித்துத் தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்களும் போலீஸாரும், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், தலையில் மிகப்பலத்த காயம் அடைந்திருந்த லதா (43) எட்டையாபுரம் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்த கார் டிரைவர் சிவா, கலா, விஜயா, ராஜேஸ்வரி மற்றும் சுபேதன் ஆகிய 5 பேருக்கும் எட்டையாபுரம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து எட்டையாபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கண்டெய்னர் லாரி டிரைவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக