கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தின் 100-வது மாதக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தின் 100-ஆவது மாதக் கூட்டம் கோவில்பட்டியில் உள்ள சத்தியபாமா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.கூட்டத்திற்கு மகிழ்வோர் மன்றத்தின் நிறுவனர்களான மருத்துவர் ஸ்ரீவெங்கடேஷ் தலைமை தாங்கினார். மருத்துவர் லதா ஸ்ரீவெங்கடேஷ் மற்றும் மன்ற இயக்குநர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளி இசை ஆசிரியை அமிர்த வாஷினி தமிழ்த்தாய் வாழ்த்து பாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மன்றக் காப்பாளர் மோகன்ராஜ் வரவேற்புரை ஆற்றினார்.
விழாவில் தமிழுக்கு தொண்டு செய்து வரும் ந. சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் இராஜசேகர் அவர்களுக்கு “இளங்கோவடிகள் விருது” மற்றும் சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியை ஜான்சிராணி அவர்களுக்கு “தொல்காப்பியர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும், நகரின் புகழ்பெற்ற கண் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு “மனிதநேய மருத்துவர் விருது” வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் மதுரை நகைச்சுவை மன்றம், திருச்சி நகைச்சுவை மன்றம், கோவை நகைச்சுவை சங்கம் மற்றும் இராஜபாளையம் நகைச்சுவை மன்றம் ஆகிய அமைப்புகளுக்கு “நலம் காக்கும் நகைச்சுவை மன்றம்” விருது வழங்கப்பட்டது.
நடந்து முடிந்த 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வினாலி அவர்களுக்கு “சாதனையாளர் விருது” வழங்கி பாராட்டினர்.
கவிஞர் சிவானந்தம் எழுதிய “இதயத்தின் கறைகள்” என்ற 200-ஆவது நூல் வெளியிடப்பட்டது. நூலின் முதல் பிரதியை சிறப்பு விருந்தினரான காந்திய சிந்தனையாளர் தமிழருவி மணியன் வெளியிட, மருத்துவர் ஸ்ரீவெங்கடேஷ் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து தமிழருவி மணியன் “காவியத்தாயின் இணைய மகன்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவரது உரை பங்கேற்றவர்களின் பாராட்டைப் பெற்றது.
நிகழ்ச்சியில் மன்ற இயக்குநர் ஜான்கணேஷ், மன்றக் காப்பாளர்கள் துரைராஜ், செல்வின், SSDM கல்லூரி முதல்வர் செல்வராஜ், நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பிரபு, கோவில்பட்டி கம்பன் கழக துணைத் தலைவர் இராஜாமணி, செயலாளர் சரவணச்செல்வன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் மன்றக் காப்பாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.




உங்கள் கருத்தை பதிவிடுக