இராமேஸ்வரம் கோவிலுக்கு வந்த பாகுபலி மாடு - வியந்து பார்த்த பக்தர்கள்!
இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திரவைச் சேர்ந்த பக்தர்கள் குழு ஒன்று வீட்டில் வளர்க்கும் மாட்டுடன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். பாகுபலி திரைப்படத்தின் காட்சியில் வரும் மாட்டைப்போலவே இவர்கள் அழைத்து வந்த மாடும் மிகவும் பெரியதாக காணப்பட்டதால் கோவிலில் இருந்த பக்தர்கள் "பாகுபலி மாடு" ஆச்சரியத்துடன் கண்டு மாட்டை தொட்டு வணங்கினர்.
ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவரது குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக தங்கள் வீட்டில் வளர்க்கும் மாட்டுடன் சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் சுமார் 1400 Km தூரம் பயணம் செய்து தமிழ்நாட்டில் உள்ள 30க்கும் அதிகமான கோவில்களில் சாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக ராஜூ தனது குடும்பத்துடன் மூன்றாவது தலைமுறையாக இந்த மாட்டுடன் ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு வந்து இங்குள்ள 30 கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து புறப்பட்ட ராஜு மற்றும் அவரது குடும்பத்தினர்கள் 10 பேர் கொண்ட குழு மற்றும் அவர் வளர்க்கும் மாட்டுடன் இந்தாண்டுக்கான கோவில் யாத்திரையை சரக்கு லாரியில் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு தற்போது ராமநாதசுவாமி தரிசனம் செய்வதற்காக 24-ம் தேதி காலை இராமேஸ்வரம் வந்தடைந்தனர். அங்கு மாட்டின் உடல் முழுவதும் மணிகளை கட்டிக்கொண்டு நன்கு அலங்கரித்ததுடன் நெத்தி பொட்டு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளியால் ஆன சாமி திருவுருவம் பொறிக்கப்பட்ட டாலர்களைக் கொண்டு அலங்கரித்து கயிற்றை பிடித்தவாரு மாட்டை சுற்றி 2 நபர்கள் இரும்பு மேளம் தட்டியவாறு சுமார் 2 km தூரம் நடந்தே இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு சென்றனர். பின்னர் இராமேஸ்வரம் திருக்கோயில் நுழைவாயிலில் மாட்டை கட்டி விட்டு திருக்கோயிலுக்குள் சென்ற ஆந்திர பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இவர்கள் அனைத்து கோயில்களும் தலைமுறை தலைமுறையாக தாங்கள் வளர்க்கும் மாட்டை கோயிலின் நுழைவாயில் கட்டிவிட்டு சாமி கும்பிட்டு வருகின்றனர் என்பதும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. மேலும் இவர்கள் அழைத்து வந்த இந்த மாடு பாகுபலி படத்தில் வருவது போல் மிகப்பெரிய அளவில் வித்தியாசமாக இருந்ததால் அந்த மாட்டை இராமேஸ்வரம் வந்திருந்த வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்துடன் அதை தொட்டு வணங்கினர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ராஜூ குடும்பத்தினர் இராமேஸ்வரத்தில் தரிசனத்தை முடித்து விட்டு வரும் 30-ம் தேதிக்குள் கன்னியாகுமரி, திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கோவில்களில் மாட்டுடன் சுவாமி தரிசனம் செய்து விட்டு சொந்த ஊர் திரும்ப உள்ளனர். இராமேஸ்வரத்திற்கு மாட்டுடன் சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திர பக்தர்களை உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக