ஊழியம் செய்ய வரும் பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் குருவானவரை மாற்றக் கோரி தூத்துக்குடி தாளமுத்து நகர் சிஎஸ்ஐ தூய இம்மானுவேல் ஆலயத்தை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து ஆண்கள் ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் அமைந்துள்ளது சிஎஸ்ஐ திருச்சபைக்கு சொந்தமான தூய இம்மானுவேல் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் குருவானவராக காலேப் மான்சிங் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்து அந்த ஆலய குருவானவராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், அங்கு வேலை பார்த்த வேத பாட ஆசிரியர் சுபாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையில் பேசியதால் மனம் உடைந்த ஆசிரியை சுபா காலாவதியான மாத்திரைகளை போட்டு கடந்த 15 நாட்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து தேவாலய குருவானவர் காலேப் மான்சிங் மீது கடந்த 14ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர் காவல் நிலைய ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று, தூத்துக்குடி தாளமுத்து நகர் தூய இம்மானுவேல் ஆலயத்தில் ஆராதனைக்கு வந்த ஆண்கள் பெண்கள் ஆலய குருவானவரை மாற்றக்கோரி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், இந்த ஆலயத்திற்கு குருவானவராக காலேப் மான்சிங் வந்த நாள் முதல் ஆலயத்தில் பிரச்சனைகள் அதிகமாகி வருவதாகவும், தொடர்ந்து பெண்களை அவமானப்படுத்தி பேசி வருகிறார்.
ஊழியம் செய்ய வரும் பெண்களை கேலியும் கிண்டலும் செய்து வருகிறார். என்பேச்சை கேட்காத பெண்களை ஊழியம் செய்யக்கூடாது என்றும், ஊழியம் வயதானவர்கள் செய்யக்கூடாது என்றும் என்னுடைய சொல் பேச்சை கேட்டு செய்பவர்கள் மட்டுமே ஊழியம் செய்ய முடியும் என்கிறார். ஆகவே அந்த ஐயா எங்களுக்கு வேண்டாம் இவரால் ஆலயத்தில் எந்த வளர்ச்சியையும் பார்க்க முடியாது பெண்கள் ஊழியமும் செய்ய முடியாது. பெண்களுக்கு பாதுகாப்பும் கிடையாது ஆதலால் இவரை மாற்றி விட்டு வேறு குருவானவரை நியமிக்க வேண்டும் என்றனர்.
தொடர்ந்து இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் பேராயரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் மற்றும் பெண்களை குருவானவர் காலேப் மான்சிங் தூண்டுதலின் பேரில் பெண்களை வீடியோ மற்றும் புகைப்படத்தை அதே ஆலயத்தைச் சார்ந்த ஊழியர் எடுத்ததால் அவரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் எங்கள் அனுமதியின்றி எங்களை எப்படி வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்கலாம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.



உங்கள் கருத்தை பதிவிடுக