100 நாள் வேலைத்திட்டத்திற்கான நிதியை விடுவிக்க கோரி நிர்மலா சீதாராமனிடம் கனிமொழியுடன் இணைந்து மனு அளித்த தங்கம் தென்னரசு!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.1,056 கோடி நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்கக்கோரி தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியுடன் இணைந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி உடனிருந்தார்.முன்னதாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் கிராமப்புற குடும்பங்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை வழங்கும் பொருட்டு நிதியை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனவரி 13ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம் (MGNREGS) என்பது கிராமப்புற இந்தியாவிற்கான ஒரு முக்கியமான ஊதிய வேலைவாய்ப்புத் திட்டமாகும், இது கிராமப்புற குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக செயல்படுத்துவது மட்டுமல்லாமல், கிராமியப் பகுதிகளில் நீடித்த மற்றும் நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் 76 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 91 இலட்சம் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளில் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றனர். இதில் 86% வேலைவாய்ப்பு பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதுடன் கிட்டத்தட்ட 29% தொழிலாளர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் மாற்றுத்திறனாளி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என்பதையும் சுட்டிக்காட்டி இருந்தார்.




உங்கள் கருத்தை பதிவிடுக