சோகத்திலும் சோகம்..! : ரத வாகனம் செல்ல முடியாத நிலை: விருதுநகர் அருகே 1.5 Km தூரம் சேறும்-சகதியிலும் பெரும் சிரமத்திற்கு இடையில் இறந்தவரை தோளில் சுமந்து கொண்டு மயானத்திற்குச் செல்லும் கிராமவாசிகள்!
விருதுநகர் மாவட்டம் ஆதிப்பட்டி கிராமத்தில் மயானத்திற்கு முறையான பாதை வசதி ஏற்படுத்தி தராததால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மேடு பள்ளங்களாக காணப்படும் சிறிய பாதை வழியாக தான் இறந்தவர்களின் சடலத்தை தோளில் தூக்கி சென்று நல்லடக்கம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக மழைக்காலங்களில் இப்பாதையை கடந்து மயானத்திற்கு செல்வதென்பது அக்கிராம மக்களுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், இக்கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான கூத்தபெருமாள் என்பவர் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்த நிலையில், அவரது சடலத்தை உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் இன்று மாலை தகனம் செய்வதற்காக அக்கிராமத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ தூரத்தில் இருக்கும் மயானத்திற்கு தங்களது தோளில் சுமந்தபடி பெரும் சிரமத்திற்கு இடையில் சென்றுள்ளனர். இங்கு மயானத்திற்கு முறையான பாதை வசதி ஏற்படுத்தி தராததால் ரத வாகனத்தின் மூலம் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல முடியாத அவலநிலை இருப்பதால் நல்லடக்கம் செய்வதற்காக நீண்ட இறந்தவர்களின் உடல்களை தோளில் சுமந்து கொண்டு செல்லும் மோசமான நிலை தொடர்ந்து கொண்டிருப்பதாக அக்கிராம மக்கள் கூறினர். அதுமட்டுமின்றி, மயானத்திற்கு செல்வதற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது வரை முறையான பாதை வசதி ஏற்படுத்தி தராததால் சேறும், சகதியுமாக சூழ்ந்து காணப்பட்ட நடப்பதற்கே லாயக்கற்ற மோசமான பாதையில் சடலத்தை மிகவும் ஆபத்தான முறையில் உறவினர்கள் கொண்டு சென்றனர். மேலும் லேசான மழைக்கே மயானத்திற்கு செல்வதற்கு இவ்வளவு சிரமமென்றால்..... அதிகப்படியான மழைக்காலங்களில் இக்கிராம மக்கள் மயானத்திற்கு செல்வதை கற்பனை செய்ய முடியாத நிலையில்தான் உள்ளது ஆதிப்பட்டி கிராமத்தின் மயானத்தின பாதை... ஆகையால், உடனடியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இக்கிராம மக்களின் சிரமத்தை உணர்ந்து மயானத்திற்கு முறையான சாலை வசதி ஏற்படுத்தி தருவதோடு, மயானத்திற்கு சுற்றுச்சுவர் வசதியும் ஏற்படுத்தித்தர நடவடிக்கை வேண்டும் என்பது அக்கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.




உங்கள் கருத்தை பதிவிடுக