"அக்னி நட்சத்திரம்" தொடங்கியுள்ள நிலையில், கொளுத்தும் வெயிலை தணிக்க குளுகுளு வென சர்பத், பதநீர், மோர்... விளாத்திகுளத்தில், பொதுமக்களுக்கு குடிங்க... குடிங்க... என கொடுத்த அமைச்சர் கீதாஜீவன்!
தமிழகத்தில் ஏற்கனவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்துவந்த நிலையில், வானிலை மையம் அறிவிப்பின்படி, நேற்றைய தினம் முதல் "அக்னி நட்சத்திரம்" தொடங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தினால் மிகவும் சிரமம் அடைந்து வந்த சூழ்நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் துவங்கியதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கத்தரி வெயிலின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர்களும் தங்களது கட்சி சார்பில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வெயில் தாக்கத்திலிருந்து விடுபட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நீர்,மோர் பந்தல் அமைத்து உதவி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாத்திகுளம், எட்டையாபுரம், புதூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள பேருந்து நிலையங்களின் முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், ஆகியோர் நீர், மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தாகத்தை தணிக்கும் வகையில், குளிர்ச்சியான சர்பத், மோர், இளநீர்,பதநீர், தர்பூசணி, நுங்கு, வாழைப்பழம், கிர்ணிப்பழம் உள்ளிட்டவற்றை வழங்கினர்.... இதில் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள், கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பதநீர், குளிர்பானங்களை பருகினர்.



உங்கள் கருத்தை பதிவிடுக