கூட்டுறவு சங்கத்தில் 100 பவுன் தங்க நகையை திருட முயற்சி :காவல்துறை சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்களுக்கு பாதுகாப்பு ஆலோசனை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வெள்ளையம்மாள்புரம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது கிராம கூட்டுறவு கடன் சங்கத்தில் வழக்கம்போல் பணிகள் முடிந்ததும் அங்கிருந்த எழுத்தர் மாரீஸ்வரி கட்டிடத்தின் கதவுகளைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் இன்று கூட்டுறவு சங்கச்செயலாளர் செல்வகுமார் (56), என்பவர் நேற்று முக்கிய அலுவல் பணி காரணமாக சங்க அலுவலகத்தை திறப்பிற்காக வந்துள்ளார். அப்போது கூட்டுறவு கடன் சங்கக் கட்டிடத்தின் முன் பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.உடனடியாக அவர் கட்டிடத்தின் உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அங்கிருந்த முக்கிய லாக்கரின் அறை சுவற்றை பலவந்தமாக உடைத்துக் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அதை உடைக்க முடியவில்லை என்பதால் அங்கிருந்து சென்றுள்ளனர்.அதிர்ஷ்டவசமாக லாக்கர் அறை உடையாததால் உள்ளே இருந்த பணம் மற்றும் நகைகள் தப்பியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி சிசிடிவி கேமரா வயர்களையும், அபாய அலார மணி வயர்களையும் துண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தகவலறிந்த எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் உமாமகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் விரைந்து தடயங்களைச் சேகரித்தனர். லாக்கர் இருந்த அறையின் சுவரை உடைக்க முடியாததால் சுமார் 100 பவுன் நகைகள் மற்றும் பத்திரங்கள் தப்பியது. இத்துணிகரக் கொள்ளை முயற்சி குறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து இன்று விளாத்திகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்கள் மற்றும் அலுவலர்களை அழைத்து விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன் தலைமையில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் இரவு காவலர் கண்டிப்பாக நியமிக்க வேண்டும், நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் மற்றும் கேமரா பதிவுகளை தங்களுடைய மொபைல் போனில் கண்காணிக்க வழிவகை செய்து கொள்ள வேண்டும், தங்களுடைய சங்கங்களில் உள்ள பட்டா புத்தகத்தில் காவல்துறையினர் தினமும் வந்து கையொப்பம் செய்கிறார்களா என்பதை கண்காணித்து கையொப்பம் செய்யாவிட்டால் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
இந்தநிகழ்வில் சூரங்குடி ஆய்வாளர் சுதாகர், உதவி ஆய்வாளர்கள் நாராயணன், செந்தில் வேல்முருகன், காவல்துறையினர்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் அலுவலர்கள் என 50 கும் மேற்பட்டோர் கலந்து கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக