1 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பாரதியார் வீடு கிரிக்கெட் "ரப்பர் பந்து"அடித்ததில் சேதம்!
சேதம் அடைந்த எட்டயபுரம் பாரதியார் நினைவு இல்லத்தை மறுசீரமைக்க வேண்டும் என்று அதிமுகவினர் கோரிக்கை!
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்திய சுதந்திரத்திற்காக, தனது புரட்சிகர பாடல்கள் மற்றும் கவிதையால் விடுதலை எழுச்சியை ஏற்படுத்திய மகாகவி பாரதியாரின் பிறந்த வீடு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நினைவு இல்லமாக உள்ளது, இங்கு பாரதியாரின் நினைவு மற்றும் பிறந்த தினம் அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது, அதேபோல் இந்தியா முழுவதும் உள்ள பாரதியாரின் கவிதை ரசிகர்கள், எழுத்தாளர்கள், பள்ள,கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர், பாரதியாரின் நினைவு இல்லத்தை பார்வையிட்டு அவர் பயன்படுத்திய சாதனங்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாரதியாரின் நினைவு இல்ல வீடு சேதம் அடைந்தது, இதனைத் தொடர்ந்து அதிமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் மற்றும் கண்டன குரல்களை எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து அப்போது இருந்த திமுக அரசு 1 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு, பாரதியாரின் நினைவு இல்ல வீடு மறு சீரமைப்பு பணியை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர்,இல்ல சீரமைப்பு பணியை ஆய்வு செய்தனர்.
தற்போது சீரமைப்பு பணி முடிவடைந்த நிலையில்,சில நாட்களுக்கு முன்பு அதே தெருவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அடித்த "ரப்பர் பந்து" தற்போது சீரமைக்கப்பட்ட பாரதியாரின் நினைவு இல்ல வீட்டில் அடித்ததில் வீட்டின் ஒரு பகுதி சேதம் அடைந்தது.
இந்நிலையில் மக்கள் வரிப்பணத்தில் பாரதியாரின் நினைவு இல்ல மறுசீரமைப்பு பணிக்காக 1 கோடி 53 லட்சம் ரூபாய் பணத்தில் முறையாக இல்லத்தை சீரமைக்காமல், மக்கள் பணத்தை பழைய திமுக அரசு முறைகேடு செய்ததாகவும், எனவே தற்போது உள்ள அரசு சேதம் அடைந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என்று தற்போதைய தமிழக அரசுக்கு, விளாத்திகுளம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கோரிக்கை விடுத்துள்ளார்.



உங்கள் கருத்தை பதிவிடுக