தூத்துக்குடி மாவட்டத்தில் சிவப்பு-நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை (Red–Blue Strobe Lights) பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை : 38 ஸ்ட்ரோப் விளக்குகள் பறிமுதல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் காவல்துறை போன்ற அரசு வாகனங்களை தவிர அங்கீகரிக்கப்படாத தனியார் வாகனங்களில் சிவப்பு-நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை (Red–Blue Strobe Lights) பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை அறிவிப்பு - தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 38 வாகனங்களில் ஸ்ட்ரோப் விளக்குகள் அகற்றம்.
சிவப்பு-நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை (Red–Blue Strobe Lights) தற்போது தனியார் வாகனங்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த விளக்குகள் அவசர வாகனங்களான ஆம்புலன்ஸ், காவல்துறை மற்றும் தீயணைப்பு ஆகிய வாகனங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிவப்பு-நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை தனியார் தங்களது வாகனங்களில் பயன்படுத்துவது சட்டவிரோதமானது.
மேலும் தனியார் வாகனங்கள் இந்த சிவப்பு-நீல நிற விளக்குகளை பயன்படுத்துவதால் பொதுமக்கள் அவசர ஊர்திக்கு வழி விடும் சூழ்நிலையை குழப்பம் அடைய செய்வதுடன், அவசர ஊர்திகளுக்கான மதிப்பை பொதுமக்கள் மத்தியில் குறையச் செய்கிறது.
அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு நேற்று (24.03.2026) ஒரே நாளில் பேருந்து,கார், லாரி, மினி சரக்கு வாகனம் என அங்கீகரிக்கப்படாத தனியார் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த மொத்தம் 38 ஸ்ட்ரோப் விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இதுபோன்ற சிவப்பு-நீல நிற விளக்குகளை தனியார் வாகனங்களில் பயன்படுத்தினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அவற்றை தாங்களாகவே நீக்கம் செய்ய வேண்டும் எனவும் மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.




உங்கள் கருத்தை பதிவிடுக