ஒரு மாநிலத்தின் உரிமையை மதித்து நடக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை; மக்களைப் பிரிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு செயல்படுகிறது: ராமேஸ்வரத்தில் கனிமொழி எம்.பி பேச்சு!
இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்தும், அதைக் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மீனவர்கள் பிரச்னையில் நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து திமுகவினரும், மீனவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஒன்றிய அரசைக் கண்டித்துக் கண்டன முழக்கமிட்டனர். இராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முன்னேற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி:இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டத்தை, போராட்டத்தை ஒன்றிய அரசை எதிர்த்து முதலமைச்சர் நடத்தச் சொல்லி இருக்கிறார்கள். எந்த நேரத்திலும் மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும், யாருக்கு எந்த தேவை என்றாலும் ஓடோடி வந்து உதவி செய்யக் கூடிய ஒரு சட்டமன்ற உறுப்பினராக காதர்பாஷா முத்துராமலிங்கம் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஏறத்தாழ 3,544 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சி வருவதற்கு முன்னர், பாஜக மூத்த தலைவர் மறைந்த சுஷ்மா சுவராஜ் தலைமையில் கடல் தாமரை மாநாடு நடத்தினார்கள்.
தமிழ்நாட்டிலே தாமரையே மலராது. ஆனா கடலில் தாமரை மலரும்னு கடல் தாமரை போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்துக்குப் பிறகு தாமரையையும் காணவில்லை, பாஜகவையும் காணவில்லை.
எந்த பிரச்சனை வந்தாலும் அதற்கு ஒன்றிய அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. நாணும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அவர்களும் பலமுறை இங்கே இருக்கக்கூடிய பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எடுத்து உரைத்தோம்.
மீனவர்களின் படகுகளை இலங்கையில் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்ற இலங்கை அரசாங்கம் சட்டம் இயற்றப்பட்டு 200 படகுகள் மேல் சிறைபிடிக்கப்பட்டு, திருப்பி தராமல் இருக்கிறது. மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 97 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த வருஷம் மட்டுமே, கிட்டத்தட்ட 77 பேர், ஒரு நாளைக்கு 2 பேர் என்ற சதவீதத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள், என்ன செய்து கொண்டிருக்கிறது ஒன்றிய அரசாங்கம்?. ஒவ்வொரு முறையும் இந்த பிரச்சினையில் நாங்கள் குரல் எழுப்பும் போது, ஒன்றிய அரசு எந்த பதிலும் சொல்வதில்லை, எந்த அக்கறையும் காட்டப்படுவது இல்லை.
தொடர்ந்து, நம்முடைய மீனவர்களும், நம்முடைய முதலமைச்சரும் வைக்கக்கூடிய கோரிக்கை என்பது இரண்டு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பதுதான். அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது.
அதற்குப் பிறகு, நம்முடைய மீனவர்களை சிறை பிடிக்கப்பட்ட போது, டெல்லி இருக்கக்கூடிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரை சந்தித்துத் நிரந்தர தீர்வு காண வலியுறுத்தினோம். ஆனால், மீனவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
முதலமைச்சர் ஒவ்வொரு முறையும் பிரதமரை சந்திக்கும் போது மீனவர்களுடைய பிரச்சினையை எழுப்பத் தவறியதே இல்லை என்பதுதான் உண்மை. தொடர்ந்து, இந்த பிரச்சினைகளுக்கு உரியத் தீர்வு காண வேண்டும் என்பதுதான் நாங்கள் வைத்துக் கொண்டிருக்கக் கூடிய முக்கிய கோரிக்கை.
இந்த உலகத்தில், இரண்டு நாடுகளுக்கும் இடையே இருக்கக்கூடிய மீன் பிடி கடல் பிரச்சனைகளை சரிசெய்து தீர்வு கண்டு, அமைதியாகவும், பாதுகாப்பாகவும் மீன்பிடித்துக்கொண்டிருந்த சூழலை நாம் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இருக்கக்கூடிய பிரச்னைகளை சரிசெய்ய ஒன்றிய அரசு முன்வரவில்லை என்பதுதான் எங்களுடைய கேள்வி. பல நாடுகளில் இருக்கக்கூடிய மீனவர்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல், அச்சுறுத்தல் இல்லாமல் மீன்பிடி தொழிலை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த நிரந்தர தீர்வை தான் நாம் எதிர்பார்க்கிறோம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினோம். நம்முடைய மீனவர்களின் துயரத்தையும் வலியையும் புரிந்துகொண்டு இந்தியா கூட்டணிக் கட்சி எம்பிக்களும் பங்கேற்றுக் கண்டன குரல் எழுப்பினார்கள். அந்த போராட்டத்திற்கு வராதது அதிமுகவும், பாஜகவும்.
இன்றைக்கு அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்ப பயப்படக்கூடிய இந்திய சகோதர சகோதரிகளுக்கு கைகளிலே விலங்கு இடப் படுகிறது. அதைப்பற்றி பிரதமர் கேட்பாரா? அதைப் பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, அதற்கு சரியான பதில் அளிக்க துணிவு இல்லாத ஆட்சி தான் ஒன்றியத்தில் இருக்கின்றது. ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பாஜக ஆட்சியை எதிர்த்து சித்திரம் தீட்டினாள், முடக்கப்படுகிறார்கள். ஒன்றிய பாஜகவிற்குத் தெரிந்தது ஒன்றுதான், கேள்வி கேட்டல் அழித்துவிடு, முடக்கிவிடு. எந்த கேள்விக்கும் உண்மையான, நேர்மையான பதிலை ஒன்றிய பாஜக அரசு சொன்னது இல்லை.
எனக்கு வாக்கு அளித்தவர்களுக்கு, வாக்கு அளிக்காதவர்களுக்கும் பாடுபடுவேன் என்று முதலமைச்சர் கூறினார். பல மாவட்டங்களுக்கு முதல்வர் ஆய்வுக்கு செல்லும்போது, பொதுமக்கள் கோரிக்கை மனுக்களைத் தருகிறார்கள். அவர்களிடம், நீங்கள் எந்த கட்சி என்று முதலமைச்சர் கேட்டது இல்லை. ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜகவிடம் கோரிக்கை வைத்தால், இந்த மாநில மக்கள் எங்களுக்கு வாக்கு அளிக்கவில்லை. அதனால், ஏன் உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று? ஒன்றியத்தில் இருக்கக்கூடியவர்கள் மக்கள் பிரதிநிதியா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இந்த போராட்டம், இதற்கு மேல் போராட வேண்டிய அவசியமில்லை என்ற நிலையோடு முடிய வேண்டும். அப்படியில்லையென்றால், இந்த போராட்டம் டெல்லியிலும் தொடரும். சென்ற மாநாடு இந்த பகுதியில் நடத்தப்பட்டபோது, கிட்டத்தட்ட ஆயிரம் கோடிக்கு மேலான திட்டங்களை அந்த மேடையிலேயே அறிவித்த முதலமைச்சர். விரைவில் உங்களுடைய வலிகளுக்குத் துன்பங்களுக்குத் தீர்வை காண்போம் என்று பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன், முன்னாள் அமைச்சர் சத்யமூர்த்தி, முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன், முன்னாள் ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளரும், தீர்மானக் குழு துணைத்தலைவருமான சுப.த.திவாகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பவானி ராஜேந்திரன், திமுக மீனவர் அணி துணைச்செயலாளர் ராமச்சந்திர ராமவணி, மீனவ அமைப்புகளின் தலைவர்கள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக