தனது மகளின் பெயருக்கு இடத்தை பத்திரப்பதிவு செய்வதற்கு 30 ஆயிரம் லஞ்சம் கேட்ட எட்டையாபுரம் சார்பதிவாளர் : ஒரு வாரமாக அலையும் 84 வயது முதியவர்!
அலைக்கழிப்பு செய்த சார்பதிவாளரால், பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என்று விரக்தியில் சென்ற முதியவர்.
கடந்த சில நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தமிழக முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணத்தினை பறிமுதல் செய்து வருகின்றனர், அதேபோல் தமிழகத்தின் புதிய பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மதுரை வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டு, பத்திரப்பதிவுக்கு வரும் பொது மக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும், லஞ்சப்பணம் ஏதும் கேட்கக்கூடாது என்று நேற்று அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள கீழக்கரந்தை கிராமத்தை சேர்ந்த திருமேனி என்ற (84) வயது முதியவர், தனக்கு சொந்தமான 2 ஏக்கர் 5 செண்டு அளவுள்ள புஞ்சை நிலத்தை தனது ஒரே மகளான முருகவேணிக்கு பத்திரம் பதிவு செய்ய கடந்த வாரம், கோயம்புத்தூரில் உள்ள தனது மகள் முருகவேணியை வரவழைத்து பத்திர ஆவணங்களுடன் கடந்த வாரம் எட்டையாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
அப்போது அங்கிருந்த சார் பதிவாளர் ஜமுனாராணியும், செயலாளர் வீரயாவும், முதியவர் திருமேனியின் தந்தை பெயர் சுப்பாநாயக்கர் பதிலாக சுப்பையா என இருப்பதால்,சரியான பெயருடன் இருக்கக்கூடிய ஆவணத்தை கொண்டு வருமாறு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர், இந்நிலையில் ஜூன் 4-ம் தேதி தனது தந்தை பெயர் சுப்பையா நாயக்கர் என உள்ள வாக்காளர் அட்டையுடன் வந்த திருமேனியை இந்த ஆவணம் ஏற்கப்படாது என்று மீண்டும் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர், இந்நிலையில் ஜூன் 5-ம் தேதி வந்த திருமேனி மற்றும் முருகவேணியிடம் சார்பதிவாளர் ஜமுனாராணியும், செயலாளர் வீரையாகும் அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாத இடத்தில் வைத்து ரூபாய் 30,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது, இதற்கு முருகவேணி தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து தகவல் அறிந்து சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த செய்தியாளர்களை பார்த்து, செயலாளர் வீரயா இங்கு செல்போனில் வீடியோ எடுக்கக்கூடாது வெளியே போங்கள் உள்ளே நீங்கள் வரக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். செல்போனில் வீடியோ எடுப்பதை பார்த்த சார்பதிவாளர் ஜமுனாராணி தனது இருக்கையில் இருந்து கிளம்பி உள்ளே உள்ள அறைக்கு சென்று விட்டார், இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது சார்பதிவாளர் ஜமுனாராணி முருகவேணியிடம் நீங்கள் ஒரு நபர் சான்றிதழ் பெற்று வாருங்கள் உங்களுக்கு பத்திரப்பதிவு செய்து தரேன் என்று மீண்டும் திருப்பி அனுப்பியதால், விரக்தி அடைந்த முருகவேணி மற்றும் வயதான முதியவர் திருமேனி ஆகியோர் எங்களுக்கு பத்திரப்பதிவே வேண்டாம்,என்று அங்கிருந்து கையில் கம்பை ஊனியபடி தள்ளாடி நடையை கட்டினர்.
கடந்த வாரம் உரிய ஆவணம் இல்லாமல் காற்றாலை நிறுவனத்திற்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாகவும், ஏழை மக்களிடம் லஞ்சப்பணம் கேட்டுக்கொடுக்கவில்லை என்றால் சான்றிதழ் சரியாக இல்லை என்று எட்டையாபுரம் சார்பதிவாளர் பொதுமக்களை அலைக்கழிப்பு செய்வது வாடிக்கையாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக