பனையூரில் மோசமான நிலையில் பயணிகள் நிழற்குடை : இடித்துவிட்டு புதிய நிழற்குடை அமைக்க கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையூர் கிராமத்தில், தூத்துக்குடி - இராமநாதபுரம் செல்லும் ஈ.சி.ஆர் சாலையில் மிகவும் சேதமடைந்து எப்போதுவேண்டுமென்றாலும் இடிந்து விழலாம் என்பதைப்போல ஆபத்தான நிலையில், பயணிகள் நிழற்குடை ஒன்று மோசமாக இருந்து வருகிறது.

தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் இந்த பயணிகள் நிழற்குடை கட்டிடத்தின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து கம்பிகளுடனும், சுற்றுச்சுவர் மற்றும் முன்பகுதி அதிகளவில் உடைந்தும் காட்சியளிக்கிறது. பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய பயணிகள் அதிக வெயிலின் தாக்கம் காரணமாக இந்த ஆபத்தான பயணிகள் நிழற்குடை கட்டிடத்தைதான் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

முற்றிலும் பயன்படுத்துவதற்கு லாயக்கற்ற இந்த பேருந்து நிழற்குடை கட்டிடம் இடிந்து விழும் முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் உடனடியாக மிகவும் சேதமடைந்து காணப்படும் இந்த பயணிகள் நிழற்குடை கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய பயணிகள் நிழற்குடையை அமைத்துத்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாள்தோறும் அதிகளவிலான பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இந்த ஆபத்தான பயணிகள் நிழற்குடையை பெரும் விபத்து ஏற்படும் முன்பு உடனடியாக அப்புறப்படுத்தி புதிதாக நிழற்குடை அமைத்துத்தர வேண்டும் என்பது அனைத்துத்தரப்பினரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.