நெடுஞ்சாலை துறையின் அலட்சியம்.... எச்சரிக்கை பலகைகள், பாதுகாப்பு தடுப்புகள் இன்றி ஆபத்தான முறையில் நடைபெறும் பாலம் கட்டுமான பணிகள் : உயிர்பலிக்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை!  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி செல்லும் சாலையில், கே. சுப்பையாபுரம் கிராமத்தில் இருந்து சின்னூர் வரை சுமார் 5 கி.மீ தூரத்திற்கு ரூ.7 கோடி செலவில் சாலை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு தற்போது சாலை அமைக்கும் பணிகள் ஓரளவிற்கு முடிவுற்ற நிலையில் 3 பாலங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் சாலையில் எவ்வித முன்னெச்சரிக்கை பதாகைகள், பாதுகாப்பு தடுப்புகள், அபாய எச்சரிக்கை ஸ்டிக்கர் என எந்த ஒரு அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல்... 4,5 சிறுசிறு கற்களை கொண்டு தடுப்பு வைத்து அஜாக்கிரதையாக செயல்பட்டு வருகின்றனர் நெடுஞ்சாலை துறையினர். அதுமட்டுமின்றி, கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் பாலங்கள் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக மாற்றுப்பாதையும்கூட வாகனங்கள் செல்வதற்கென சரிவர அமைக்கப்படாமல் மேடு-பள்ளமாக குறுகலாக அமைக்கப்பட்டுள்ளதால், அடிக்கடி அப்பகுதியில் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். குறிப்பாக இந்த பாதுகாப்பற்ற தற்காலிக மாற்றுப்பாதையை பயன்படுத்திதான் பொதுப் போக்குவரத்து பேருந்துகளும் சென்றுவர வேண்டிய சூழ்நிலை இருப்பதால் பெரிய அளவிலான விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வதற்குள்ளாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உடனடியாக மிகவும் அலட்சியமாக செயல்பட்டு வரும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுத்து பாதுகாப்பான முறையில் பாலங்கள் கட்டும் பணி மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதேபோல், இங்கு பல கோடி மதிப்பில் புதிதாக போடப்பட்டுள்ள சாலையின் இருபுறமும் முறையாக சரள்மண் போடப்படால் கரம்பை மண் கொண்டு நிரப்பி தரமற்ற முறையிலும் அமைப்பட்டிருப்பதாகவும், இதனை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு பொதுமக்கள் உயிர்க்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் சாலை& பாலங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து பணிக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து முறையாக தரமான சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.