கருப்பட்டிக்கு  விலையில்லாததால் கவலை : அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய பனைத்தொழிலாளர்கள் கோரிக்கை!

"கற்பகவிருட்சம் " என அழைக்கப்படும் பனை மரத்தில் பதநீர், நுங்கு, பனங்கிழங்கு, கருப்பட்டி, பனங்கற்கண்டு என பல்வேறு சுவை மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்ட பொருள்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.  ஒரு ஆண்டில் இந்த பனைத்தொழிலை மட்டுமே நம்பி  6 மாதமும், மீதமுள்ள 6 மாத காலம் சிறு சிறு கூலி வேலைகளுக்கும், கடன் வாங்கியும் தங்களின் வாழ்க்கையை பெரும் சிரமத்திற்கு இடையில் நடத்தி வருகின்றனர். முன் காலங்களில் கூட்டுறவு சங்கங்களில் பனைத் தொழிலாளிகளுக்கு கடன் வழங்கப்பட்டு வந்தநிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பனைத் தொழிலாளர்களுக்கு  கூட்டுறவு சங்கங்களின் மூலமாக கடனுதவி வழங்கப்படாததால் பனைத் தொழில் செய்வோர் தங்களது வாழ்வாதாரம் இழந்து மாற்று தொழிலுக்கு சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது. அதேபோல் வியாபாரிகள் பனைத்துள்ளாளர்களிடமிருந்து கருப்பட்டியை குறைந்த விலைக்கு வாங்கிச் சென்று அதிக விலைக்கு விற்பதால், இந்த புகழ்பெற்ற வேம்பார் கருப்பட்டியை தமிழக அரசே கொள்முதல் செய்து அரசு நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்தால் தங்களுக்கு உரிய விலை கிடைக்கும் என்று அனைத்து உள்ளாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளான வேம்பார், குளத்தூர், தாப்பாத்தி, அயன் வடமலாபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் தற்போது பதநீர் இறக்கம் மற்றும் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.. இருப்பினும் ஆர்வமுடன் இருந்தார் இப்பகுதியைச சேர்ந்த பனைத்தொழிலாளர்கள் காலை, மதியம், மாலை என 3 வேளைகளிலும் பனை மரங்களில் ஏறி பதநீர் இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி பதநீர் விரும்பிகள் விடியற்காலையிலேயே பதநீர் இருக்கும் இடத்திற்கு  சென்று பதநீர் பருகுவது மட்டுமின்றி பாட்டிலில் ஒரு லிட்டர் பதநீரை 100 ரூபாய் க்கு வாங்கிச் செல்கின்றனர். சீசன் சற்று தாமதமாக தொடங்கினாலும் பதநீர் ஓரளவிற்கு விலை இருப்பதாக பனைத்தொழிலாளர்கள் கூறுகின்றனர். அதேசமயம் கருப்பட்டியை மிகவும் குறைவான விலைக்கே வியாபாரிகள் வாங்கிச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு வைக்கின்றனர். 

அதுமட்டுமின்றி அதிக மவுசு மிகுந்த வேம்பார் கருப்பட்டியை பணத்தாசை காரணமாக வியாபாரிகள் சீனி கருப்பட்டியுடன் கலந்து விற்பதாகவும், இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த வண்ணம் இருக்கிறது. கிட்டத்தட்ட 80 சதவீத பனைத்தொழிலாளர்கள் தொழிலை விட்டுச் சென்று விட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

அதிக லாப நோக்கில் வியாபாரிகள் சிலர் சீனி கருப்பட்டியையும், கலப்பட கருப்பட்டியையும் புகழ்பெற்ற வேம்பார் கருப்பட்டி பெயரில் விற்பனை செய்து வருவதால் வேம்பார் கருப்பட்டிக்கான மகத்துவம் குறைந்து கொண்டே வருவதாகவும் இதனால் அரசு அதிகாரிகள் போலி கருப்பட்டியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புகழ்பெற்ற வேம்பார் கருப்பட்டிக்கு அரசு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் பனைத்தொழிலாளர்கள் மற்றும் வேம்பார் பகுதி மக்கள் சார்பாக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் தமிழக அரசு பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு நேரடியாக தொழிலாளர்களிடமிருந்து கருப்பட்டியை கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்தால் அரும்பாடு பட்டு கருப்பட்டி காய்ச்சும் அனைத்து தொழிலாளர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று கூறுகின்றனர். இதனால் பணத்தாசை பிடித்த வியாபாரிகளிடமிருந்து பனைத் தொழிலாளர்களை மீட்க முடியும் என்ற நிலை இருப்பதால் உடனடியாக தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும் என்பது இம்மக்களின் தலையாய கோரிக்கையாக உள்ளது