தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - மதுரை செல்லும் பிரதான சாலையில் பல மின்கம்பங்கள் எலும்பும்..தோலுமாக என்பதைப்போல கம்பியும்..கம்பமுமாக மிகவும் சேதமடைந்தும், ஆபத்தான நிலையிலும் இருந்து வருகிறது.

இதனை முறையாக கண்காணிக்க வேண்டிய விளாத்திகுளம் மின்வாரய அதிகாரிகள், மின் பொறியாளர்கள் கண்ணில் இன்னும் படவில்லையா... அல்லது பட்டும் அலட்சியமாக இருந்து வருகின்றனரா? என்ற கேள்வியை எழுப்புகிறது. விளாத்திகுளத்தின் பிரதான சாலையாக விளங்கி வரும் மதுரை ரோட்டில், அம்பாள் நகர் ஆர்ச் அருகில், ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் அருகில், பெருநாழி விலக்கு அருகில் என வரிசையாக பல மின்கம்பங்கள் காலாவதியாகி இப்ப விழுமோ? அப்ப விழுமோ? என்ற ஆபத்தான சூழல் நிலவி வருகிறது.

இவற்றையெல்லாம் விட.., ராஜிவ் நகரில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் கூட சேதமடைந்த மின்கம்பத்தில் தான் இருந்து வருகிறது. இதன் காரணமாக பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளாதால் விளாத்திகுளம் மின்வாரிய அதிகாரிகள், மின் பொறியாளர்கள் பொதுமக்களின் நலன் கருதி துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக விளாத்திகுளம் பகுதி முழுவதும் பழுதடைந்து காணப்படும் மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் மாற்றி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
