ஓட்டப்பிடாரம் பகுதியில் தொடர் வழிப்பறி -  6பேர் கைது : 10 பவுன் நகைகள், 4 செல்போன்கள் மீட்பு - மேலும் ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு - 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை  கண்டுபிடித்த போலீசார் - பொதுமக்கள் பாராட்டு!

தூத்துக்குடி மாவட்டம்,  ஓட்டப்பிடாரம் வ.உ.சி., தெருவை சேர்ந்த கிருஷ்ணசாமி  (72), ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவர் நேற்று அதிகாலை 5 மணி அளவில் குறுக்கு சாலையில் தெற்கு ஆவரங்காடு விலக்கு பேருந்து நிறுத்தம் அருகே வாக்கிங்  சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பைக்குகளில் வந்த கும்பல் அவரை அரிவாளால் தாக்கி அவர் அணிந்திருந்த 2½பவுன் எடை கொண்ட  2 மோதிரங்களை பறித்து  சென்று விட்டது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த கிருஷ்ணசாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதுபோல் ஓட்டப்பிடாரம் நீதிமன்றம் அருகே வாக்கிங் சென்று கொண்டிருந்த  ஓய்வுபெற்ற ஓட்டப்பிடாரம் கூட்டுறவு  வங்கி செயலர்  மாடசாமி  (60) என்பவரை தாக்கி அவரிடம் இருந்து செயின், கைச்செயின் உள்ளிட்ட சுமார் 7 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்றனர்.  இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக புகார்களின் பேரில், ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் மேற்பார்வையில்  தனிப்படை அமைக்கப்பட்டு , போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம கும்பலை தேடி வந்தனர். இந்த மர்ம கும்பல் புளியம்பட்டி பகுதியில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை எடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்திய போது ஒரு அறையில் ஏழு பேர் தங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்றதும், அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களில் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் 

தூத்துக்குடி கோவில்பிள்ளை விளையைச் சேர்ந்த செல்வபாரதி மகன் மகராஜன் (19), இனிகோ நகர் ஜெபமாலை மகன் ஜவஹர் (44), பாத்திமா நகர் அந்தோணி மகன் மோஹித் (19), புளியம்பட்டி கிழக்கு தெரு ஏசுதாசன் மகன் ரோஷன் (20), மற்றும் 2 இளஞ்சிறார்கள் என்பது தெரிய வந்தது.  

போலீசார் நடத்தி விசாரணையில் சம்பவம் நடந்தது அன்று அந்த கும்பல் தூத்துக்குடி தாளமுத்து நகரில் உள்ள ஒரு வீட்டில் வெடிகுண்டு வீசிவிட்டு , வரும் வழியில் மது அருந்தி உள்ளனர். தூத்துக்குடி குறிஞ்சிர் நகர் 4ஆம் கேட் அருகே சென்று கொண்டிருந்த ஏரல்  சேதுக்குவாய்த்தான் மேலத் தெருவைச் சேர்ந்த லாரி டிரைவர் இருதயதுல்லா (51) என்பவரை வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.4ஆயிரம் பணம், மற்றும் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதுபோல் தூத்துக்குடி தாளமுத்துநகர் டி.சவேரியார்புரத்தை சேர்ந்தவர் முருகன் மகன் அஜித்குமார் (28). தனியார் நிறுவன ஊழியரான இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு வேலை முடிந்து டி.சவரியார்புரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வரும் போது, அவரையும் இந்த கும்பல்  வழிமறித்து செல்போனை பறித்துக்கொண்டு அஜித் குமாரின் முதுகில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் காயமடைந்த அஜித்குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் பின்னால் தான் ஓட்டப்பிடாரத்தில் இரண்டு வழிமுறை சம்பவங்களை இந்த கும்பல் அரங்கேற்றி உள்ளது.ஓட்டப்பிடாரம், தூத்துக்குடியில் ஒரே நாளில் பல்வேறு பகுதிகளில் இந்த கும்பல் கைவரிசை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில் போலீசார் கைது செய்து இந்த வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக அவர்களிடம் இருந்து  4 செல்போன், 10 பவுன் நகைகள் மற்றும் அவர்களது மூன்று இருசக்கர வாகனம் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தப்பி ஓடிய மேலும் ஒருவரை போலீஸா தேடி வருகின்றனர்.

சம்பவம் நடைபெற்று 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்...