3 பேர் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது- புதூரில் கல், கட்டைகளைக் கொண்டு கொடூரமாக தாக்கிக்கொண்ட வீடியோவால் பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில், "அன்பு மெஸ்" என்ற ஹோட்டலிற்கு மதுபோதையில் சாப்பிட சென்ற கீழக்கரந்தையைச் சேர்ந்த 3 இளைஞர்கள் சாப்பிட்ட ஆம்லெட்டிற்கு சரியான பணம் கொடுக்காமல் ரகளையில் ஈடுபட்டதை தொடர்ந்து அது ஜாதி பிரச்சினையாக மாறியதில் அங்கிருந்த ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கல், கட்டையால் இளைஞர்கள் மீது கொடூரமாக தாக்கியுள்ளனர். இதையடுத்து இந்த தாக்குதல் தொடர்பாக 3 பேரை SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புதூர் போலீசார் கைது செய்துள்ளனர். 


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள P. ஜெகவீரபுரம் கிராமத்தைச் சேர்ந்த இராமமூர்த்தி என்பவர் புதூரில் "அன்பு மெஸ்" என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கீழக்கரந்தையைச் சேர்ந்த ராமர், திருமேணிச்சாமி ஆகிய இளைஞர்கள் சாப்பிடுவதற்காக "அன்பு மெஸ்" ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். மிகுந்த மது போதையில் இருந்த இளைஞர்கள் ஹோட்டலில் ஆம்லெட், ஆப் ஆயில் என 10 முட்டைகளுக்கு-க்கு மேல் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்கும் போது 4 முட்டைகள் மட்டும்தான் சாப்பிட்டோம்... என்று கூறி ரகளையில் ஈடுபட்டதோடு ஹோட்டலில் இருந்த பாத்திரங்களை தூக்கி வீசி பில்-கவுண்டரில் அமர்ந்திருந்த ஹோட்டல் உரிமையாளர் இராமமூர்த்தியின் மனைவி போவுத்தாயை ஆபாச வார்த்தைகளால் அவதூறாக பேசியுள்ளனர். இதையடுத்து இராமமூர்த்தியின் மனைவி தொழில் நடத்தும் இடத்தில் பிரச்சனை வேண்டாம் என்று எண்ணி கொடுப்பதை கொடுத்துவிட்டு செல்லுங்கள்... என்று கூறி இளைஞர்களை வெளியே அனுப்பிவிட்டார். 


மது போதையில் அசிங்கமாக திட்டிக்கொண்டே ஹோட்டலில் இருந்து வெளியே வந்த ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த இளைஞர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை அவதூறாக பேசியுள்ளனர். இதைக்கேட்ட அருகில் இருந்த அதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.."எங்க ஜாதியை பத்தி எதுக்கு தப்பா பேசுற..." என்று இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்த நபர்கள் புதூரில் சாப்பிட வந்த போது இங்கு பிரச்சனை ஆகிவிட்டது என்று கூறி கீழக்கரந்தையிலிருந்து மேலும் 2 இளைஞர்களை வர வைத்துள்ளனர். ஆம்லெட்டுக்காக ஆரம்பித்த ரகளை ஜாதி பிரச்சனையாக முற்றியதையடுத்து, அங்கிருந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இளைஞர்களை கல் மற்றும் கட்டையால் கொடூரமாக துரத்திதுரத்தி தாக்கியுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த புதூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று சண்டையை தடுத்து நிறுத்தி இதில் பலத்த காயமடைந்த கீழக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்த மாரீஸ்வரன் (26), பிரவீன் ராஜ் (27) மற்றும் ராமர் (24) ஆகிய மூன்று பேரும் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இளைஞர்களை கொடூரமாக தாக்கிய எம்.துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி (48), நல்லதம்பி (50), சரவணன் (45) ஆகிய மூன்று பேரையும் புதூர் காவல் நிலைய போலீசார் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அதுமட்டுமின்றி, ஹோட்டல் உரிமையாளர் இராமமூர்த்தியின் மனைவி போவுத்தாய், "ஹோட்டலுக்கு மது போதையில் வந்த இளைஞர்கள் சாப்பிட்டு விட்டு சரியான பணம் கொடுக்காமல் தன்னை ஆபாச வார்த்தைகளால் அவதூறாக பேசியதாக" புதூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார்  வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.