விளாத்திகுளத்தில், வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் பலி: பேரூராட்சி நிர்வாகத்தினர் நாய்களை பிடிக்க என்ன நடவடிக்கை?


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் 13வது வார்டு எட்டையபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த அங்குமுத்து என்பவரின் மகன் முனியசாமி (63). இவர் சாலைப் பணியாளராக இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது சிறிய ஆட்டுக்கொட்டகை அமைத்து 5 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை தனது ஆட்டுக்கொட்டகைக்குச் சென்று முனியசாமி பார்த்தபோது ஆட்டுக்கொட்டகையில் இருந்த 4 ஆடுகள் வெறி நாய்கள் கடித்துக்குதறியபடி இறந்த நிலையில் கிடந்துள்ளன.


இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த முனியசாமி விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகத்திற்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு விளாத்திகுளம் பகுதிகளில் வெறிநாய்கள் பல ஆடுகளை கடித்து குதறிய நிலையில் தற்போது மேலும் 4 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.


விளாத்திகுளத்தில், வெறி நாய்கள் தொல்லையால் கால்நடைகள் மட்டுமின்றி பொதுமக்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்ட வந்த காரணத்தினால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விளாத்திகுளம் பேரு லட்சம் நிர்வாகத்தால் வெறிநாய்கள் பிடிக்கப்பட்டது. இருப்பினும் வெறி நாய்களை முழுமையாக பிடிக்காததன் காரணமாக தற்போது மீண்டும் நாய்களின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. ஆகவே விளாத்திகுளம் பகுதியில் அதிக அளவில் சுற்றித்திரியும் வெறிநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகத்தில் விட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.