மூலைக்கரைப்பட்டியில் பள்ளி திறந்த முதல் நாளிலேயே பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது?

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு மூலைக்கரைப்பட்டி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 450 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளி திறக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர். ஆனால் பள்ளியில் போதிய வகுப்பறை வசதிகள் இல்லை. கழிவறைகளும் கட்டப்படவில்லை. ஏற்கனவே இருந்த கழிவறையும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. புதிய கழிப்பறை கட்டும் பணிகள் மிகவும் மந்தமான முறையில் நடைபெற்று வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அதுபோல பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்யவில்லை. இதையடுத்து பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிளேயே பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.