தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு. திரௌபதியம்மன் கோவிலில் பூக்குழித் திருவிழாவையொட்டி  ஆண்,பெண் பக்தர்கள் உள்ளிட்ட 188   பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

தென்காசி மாவட்டம்  சங்கரன்கோவில் செங்குந்தர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட திரௌபதியம்மன் கோவிலில் பூக்குழித் திருவிழா வைகாசி மாதம் 12 நாள்கள் நடைபெறும். இதில் பூக்குழித் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இத்திருவிழா கடந்த மாதம் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சக்திகும்பம் நிகழ்ச்சி,சுவாமி, அம்பாள் காட்சி கொடுத்தல், திருக்கல்யாணம்,திருவிளக்குப் பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.9 ஆம் திருநாளான நேற்று திரௌபதியம்மன் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழித் திருவிழா இன்று இரவு நடைபெற்றது.முன்னதாக காலை 8 மணிக்கு சக்தி நிறுத்துதல் மற்றும் அக்னிவளர்த்தல் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் சுவாமி,அம்பாள் புஷ்பவாகனத்தில் எழுந்தருளி கரக ஆட்டத்துடன் வீதியுலா வந்தனர்.பின்னர் பூக்குழி நடைபெறும் இடத்திற்கு முன்பாக  சுவாமி, அம்பாள் வந்ததும்

ஆண்,பெண் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.சிலர் நேர்த்திக் கடனாக குழந்தைகளை சுமந்துகொண்டு பூக்குழி இறங்கினர். ஆண்,பெண் உட்பட 188  பக்தர்கள் பூக்குழி இறங்கினார்.பூக்குழியை காண சங்கரன்கோவில் மட்டுமல்லாது சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் குவிந்தனர்.