"இளம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை கண்டறியும் நோக்கில்", விளாத்திகுளத்தில் மாநில அளவிலான மாபெரும் மினி மாரத்தான் போட்டி- 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தமிழகத்தின் முதல் முதல்வரான ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, "இளம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை கண்டறியும் நோக்கில்" மாநில அளவிலான மாபெரும் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆண்களுக்கு 14 கி.மீ தூரமும், பெண்களுக்கு 10 கி.மீ தூரமும், மற்றும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 4 கி.மீ தூரமும் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த மினி மராத்தான் போட்டியில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர்.


மேலும் விளாத்திகுளம் - கோவில்பட்டி சாலையில் நடைபெற்ற மினி மராத்தான் போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டயேன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு ஓடிய நிலையில், வழிநெடுகிலும் குடிநீர், அவசர முதலுதவி மற்றும் மருத்துவர் கண்காணிப்பில் மருத்துவ குழுவினர் என பலர் ஈடுபட்டிருந்தனர்.


இதைத்தொடர்ந்து இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீரங்கனைகளுக்கு கேடயம், ரொக்கப் பணம் உள்ளிட்டவை வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும், விளாத்திகுளம் - கோவில்பட்டி பிரதான சாலையில் நடைபெற்ற இந்த மினிமாரத்தான் போட்டியை முன்னிட்டு தடகள வீரர்களின் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.