விளாத்திகுளத்தில், 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலி!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ்(61) என்ற விவசாயி மற்றும் அவரதுஸமனைவி சீதாலட்சுமி (50) ஆகிய இருவரும் கோவில்பட்டி அருகே உள்ள தீர்த்தாம்பட்டியில் நடைபெற்ற உறவினரின் இல்ல விழாவிற்கு சென்றுவிட்டு இன்று மாலை குருவார்பட்டிக்கு திரும்பிச்சென்று கொண்டிருந்தனர். அப்போது விளாத்திகுளம்: எட்டையாபுரம் ரோட்டில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் அருகில், இவர்கள் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் முத்துராஜ் (20) மற்றும் அவரது நண்பர் தங்கையா இருவரும் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த R15 பைக்கானது சுப்புராஜ் ஓட்டி வந்த ஸ்கூட்டியின் மீது வந்து மோதி விபத்து ஏற்படுத்தியதில் விவசாயி சுப்புராஜ் (61) மற்றும் அவரது மனைவி சீதாலட்சுமி இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தில் சிக்கிய சுப்புராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் போலீசார் பலத்த காயமடைந்த சீதாலட்சுமி மற்றும் விபத்து ஏற்படுத்திய முத்துராஜ் (20) ஆகியோரை மீட்டு  விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் உயிரிழந்த சுப்புராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



அதுமட்டுமின்றி, விளாத்திகுளம் பகுதியில் தற்போது அதிக வேகத்தில் செல்லக்கூடிய உயரக பைக்குகளில் லைசன்ஸ் கூட இல்லாத சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்று கொண்டிருப்பதை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவே இந்த விபத்திற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஆகையால் இனியாவது விளாத்திகுளம் காவல்துறையினர் அதிவேகத்தில் இருசக்கர வாகனங்கள் செல்லக்கூடிய சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.