எப்போ சார் கடையை திறப்பீங்க....! அனாமத்தாக காட்சியளிக்கும் புதிய ரேசன் கடை - பழைய கடையிலேயே இயங்கும் அவலம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர்-கந்தசாமிபுரம் கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ரிப்பன் வெட்டி மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இருப்பினும் தற்போது வரை அந்த நியாய விலை கடை கட்டிடம் மக்களின் பயன்பாட்டிற்கு வராமல்... வெறும் காட்சிப் பொருளாக பயனற்று இருந்து வருகிறது. மேலும் தற்போது செயல்பட்டு வரும் பழைய நியாய விலை கடை கட்டிடத்தில் எந்தவித பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலையில் மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி மழைக்காலங்களில் பாம்பு, தேள், எலி போன்ற விஷச்சந்துக்களுக்கு உறைவிடமாக விளங்கும் இந்த நியாய விலைக் கடையை மாற்றி, ரூ.11 மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையில் விநியோகம் செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலை கடை எப்போதுதான்... மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் கிராம மக்கள் இருந்து வருகின்றனர்...