தூத்துக்குடி மாவட்டத்தில் மதம் மாறினால் ரூபாய் 10 கோடி பணம் தருவதாக கூறி சுமார் 5 லட்சம் பணம் மோசடி செய்தவர் கைது - சைபர் குற்ற பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு IMO என்ற app மூலமாக சொக்கநாதன் என்ற IDல் இருந்து தொடர்பு கொண்டு பேசியவர் அவரிடம், நீங்கள்  இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் ரூ.10 கோடி தருவதாக கூறி அதற்காக அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும், வருமானவரி செலுத்த வேண்டும் என பல காரணங்களைக் கூறி பணம் கேட்டடுள்ளார். அதனை நம்பி பாதிக்கப்பட்ட இளைஞர் எதிரிக்கு ரூபாய் 4,88,159/- பணத்தை Gpay மூலம் அனுப்பியுள்ளார். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த இளைஞர் இதுகுறித்து சைபர் க்ரைமில் புகார் பதிவு செய்துள்ளார். இதையடுத்து புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன்  மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்த குற்றவாளியை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரோடு, ஆனந்தம் நகர் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் ராஜவேல் (31) என்பவர் பாதிக்கபட்ட இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று (26.04.2024) தஞ்சாவூர் சென்று குற்றவாளியான ராஜவேலின் வீட்டன் அருகில் வைத்து அவனை கைது செய்து தூத்துக்குடி அழைத்து வந்தனர். பின்னர் அவனை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையிலடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.