நல்ல லாபம் கிடைப்பதால் பாப்பாளி சாகுபடியில் ஆர்வம் காட்டும் விளாத்திகுளம் பகுதி விவசாயிகள் - பாப்பாளியை பயிர்காப்பீடு திட்டத்தில் சேர்க்கவும் கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பெரும்பாலும் மானவாரி நிலங்கள் தான் அதிகம். மக்காச்சோளம், பருத்தி, நவதானியங்கள், மிளகாய், வெங்காயம் என வானம் பார்த்த பூமியில் விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். போதிய மழையின்மை, வறட்சி விதை பயிர்கள் விலை உயர்வு, உரம், பூச்சி மருந்து விலை உயர்வு, வேலைக்கு ஆள்கள் தட்டுப்பாடு போன்ற காரணங்களில் விவசாயிகள் தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
விளைந்தாலும் போதிய விலையும் கிடைக்கவில்லை என்பதால் உழவு செய்த தொகை கூட கிடைக்காத நிலை இருந்து வருகிறது. மேலும் பயிர்காப்பீடு தொகை கிடைப்பதில் பல்வேறு சிரமங்கள் இருந்து வரும் நிலையில், மெட்டில்பட்டி, சூரப்பநாயக்கன்பட்டி, முத்துச்சாமிபுரம் பகுதியில் விவசாயிகள் வழக்கமான பயிர்களுக்கு மாற்றாக பப்பாளி சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஆம்த்தூரி;ல உள்ள தனியார் நிறுவனம் மூலமாக பப்பாளி கன்றுகள் வாங்கி நடவு செய்து சாகுபடி செய்து வருகின்றனர். ஒரு கன்று 12 ரூபாய்க்கு வாங்கி நடவு செய்கின்றனர். முதலில் 6 ரூபாய் கொடுத்தால் போதும், மீதி தொகையை பப்பாளி காய்கள் அறுவடையும் போதும் தனியார் நிறுவனம் பெற்றுக்கொள்கிறது.
அது மட்டுமின்றி இதற்கான உழவு அடித்தால், இயற்கை உரம் ஈடுதல் என முதல் 3 மாதங்களுக்கு மட்டும் தான் வேலை, அதன் பின்னர் பராமரிப்பு மட்டும் தான் என்பதால் வேலைப்பளு குறைவாக இருப்பதால் விவசாயிகள் ஆர்வமுடன் பப்பாளி சாகுபடி செய்து வருகின்றனர். ஓராண்டில் பப்பாளி பால், காய்கள் அறுவடைக்கு தயராகி விடுகிறது. ஆண்டுக்கு 3 முறை பப்பாளி பாலும், ஒருமுறை பப்பாளி காய்களும் அறுடை செய்யப்படுகிறது. பப்பாளி பால், மற்றும் பப்பாளி பழம், காய் நல்ல விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதால் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். இப்பகுதியில் விளைவிக்கப்படும் பப்பாளி பால் , பப்பாளி காய் ஆகியவை பெல்ஜியம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் பெல்ஜியம் நாட்டினை சேர்ந்தவர்கள் இப்பகுதியில் விளைவிக்கப்படும் பப்பாளி பால், காய்கள் குறித்து பார்வையிட்டு, விவசாயிகளை பாராட்டியுள்ளனர். மருந்துகள் தயாரிப்புக்காக வெளிநாடுகளில் பப்பாளி பால், காய்களுக்கு நல்ல கிராக்கி உள்ளதால் தனியார் நிறுவனத்தினர் கன்று வழங்கி, கொள்முதலும் செய்து வருவதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் இருப்பதாக கூறுகின்றனர்.
தனியார் நிறுவனம் இது போன்று முயற்சி எடுக்கும் போது தமிழக அரசும், தோட்டக்கலைத்துறையும் இது போன்று முயற்சி எடுத்தால் விவசாயிகள் வாழ்வாதரம் உயரும் என்றும், வறட்சி காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் வகையில் போர் போட்டு தரவும், பப்பாளியையும் பயிர்காப்பீடு திட்டத்தில் சேர்க்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பப்பாளி சாகுபடி செய்யும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.