விளாத்திகுளம் TVS ஷோ ரூம் முன்பு "புது ஸ்கூட்டியை பதம்பார்த்த TNEB மின்கம்பம்!"

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் என்பவரின் மகன் ரவி கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் தனது நீண்ட நாள் கனவான புதிய இருசக்கர வாகனம் வாங்க வேண்டும் என்பதை நிறைவேற்றும் விதமாக விளாத்திகுளம் டி.வி.எஸ் ஷோரூமில் புதிய ஸ்கூட்டி ஒன்றை வாங்கியுள்ளார். இதற்கு நம்பர் பிளேட் பொருத்துவதற்காக இன்று ஷோ ரூமிற்கு சென்றுள்ளார்.அப்போது ஷோ ரூம் முன்பு இருந்த பழைய பனைமரம் அருகிலிருந்த மின் கம்பத்தின் மீது விழுந்ததால், மின்கம்பம் சாய்ந்து ரவியின் புதிய ஸ்கூட்டியின் மேல் விழுந்ததில் இன்னும் நம்பர் பிளேட் கூட மாட்டாத புதிய ஸ்கூட்டி உடைந்து சேதமடைந்தது. இதனைக் கண்ட ஸ்கூட்டியின் உரிமையாளர் ரவி, ஆசை ஆசையாய் வாங்கிய புது ஸ்கூட்டி உடைந்து காணப்படுவதை கண்டு பெரும் சோகமடைந்தார். மேலும், எளிதில் உடைந்து விழும் அளவிற்கு தரமற்ற மின்கம்பத்தை பொருத்தியதுதான் இந்த விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த மின்கம்பம் ஸ்கூட்டியின் மீது சாய்ந்து காரணத்தினால் பைக் சேதமடைந்ததோடு மட்டும் போனது...இதுவே மனித உயிர்கள் மீது விழுந்தால் என்ன ஆகியிருக்கும் என அங்கிருந்த பொதுமக்கள் முனுமுனுத்துக்கொண்டிருந்தனர். எனவே விளாத்திகுளம் மின்வாரிய அதிகாரிகள் தரமற்ற மற்றும் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கூறப்படுகிறது.