புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு  கொடுத்தாக புகார் -  விளாத்திகுளம் உதவி ஆய்வாளர் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டதன் பின்னணி....

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சுதாகர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு விளாத்திகுளம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினர் குடும்ப பிரச்சினை தொடர்பாக விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


இந்த புகாரை உதவி ஆய்வாளர் சுதாகர் விசாரித்துள்ளார். புகார் அளித்தவர்களில்  திருமணமான பெண் ஒருவரின் கைபேசி எண்ணை அவரது புகாரில் இருந்து எடுத்து போன் செய்து பிரச்சினை உள்ளதா என்று தொடங்கி,

"வீட்டிற்கு வரவா..." என்று இரட்டை அர்த்தத்தில் பேசி அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்மணி எச்சரித்த பின்னரும், உதவி ஆய்வாளர் சுதாகர் விடமால் தொடர்ந்து போன் செய்து தொந்தரவு கொடுத்தாக தெரிகிறது. உதவி ஆய்வாளர் சுதாகர் தொந்தரவு தாங்கமால், அந்த பெண் நடந்தவற்றை தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்த பெண்ணின் கணவர், உதவி ஆய்வாளர் சுதாகரிடம், செல்போனில் ஆபாசமாக, இரட்டை அர்த்தத்தில் பேசுவதை நிறுத்தும்படியும், தனது மனைவிக்கு தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுள்ளார்..


இதைக் கேட்டு கோபமடைந்த உதவி ஆய்வாளர் சுதாகர், அப்படி தான் பேசுவேன், இனிமேல் இதுபற்றி நீ கேட்டால், "உன்னை  கைது செய்து உள்ளே வைத்துவிடுவேன்..." என மிரட்டியதாக கூறப்படுகிறது 

இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் மனமுடைந்த அப்பெண்ணும், அவரது கணவரும்  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் நேரில் சென்று புகார் அளித்தனர். 

அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டக்காவல் கண்காணிப்பாளர் பாலாஜி விசாரணை நடத்தி, உடனடியாக விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுதாகரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். 

மேலும், கடந்த 2 தினங்களுக்கு முன்புதான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனால், உதவி ஆய்வாளர் சுதாகருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் சுதாகருக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஒரு கிராமம். இவர் வேலூர், சென்னையில் பயிற்சி உதவி ஆய்வாளராக பணியாற்றிவிட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் முதன்முதலாக விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக நியமன செய்யப்பட்டு சுதாகர் பணியமர்த்தப்பட்டுள்ளார். 

இவர் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் பணியாற்ற சேர்ந்தது முதல் காவல் நிலையத்தில் உடன் பணியாற்றும் எந்த காவலரையும் மதிப்பது  கிடையாது என்றும், ஒருமையில் பேசிவருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி, பணம் கொடுத்தால் மட்டும்தான் எல்லாம் நடக்கும் என்று வெளிப்படையாக பேசுவாராம் இந்த உதவி ஆய்வாளர். பணத்தினை வாங்கிக்கொண்டு ஒரு சார்பாக தான் விசாரணை  நடத்துவார் என்ற குற்றச்சாட்டும் இவரின் மீது இருந்து வருகிறது. மேலும் அவர் தங்கி இருந்த அறைக்கு சிலரை வரவழைத்து மன்மத ராஜா ஆட்டம் போட்டு வந்ததும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


"நானே ராஜா நானே மந்திரி" என்று மஃப்டியில் கெத்தாகத் திரிந்த உதவி ஆய்வாளர், அவரின் லீலைகளில் பாதிக்கப்பட்ட திருமணமான பெண் ஒருவர் கொடுத்த புகாரினால்  ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டதை உடன் பணிபுரிந்து வரும் சக காவலர்களும், இந்த கண்ணியமிக்க எஸ்.ஐ -ஆல் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் இவரின் தொல்லை இனி விளாத்திகுளத்திற்கு இல்லை என்று "விசில்" அடித்து கொண்டாடி வருகின்றனர்.