தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள எம்.குமரட்டியாபுரம் கிராம மக்கள், மீனாட்சிபுரம் கிராமம் புல எண்: 178/3ஏ மற்றும் 4 பல எண்களில் நடைபெறும் குவாரி உரிமைத்தினை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்ற 14/06/2023 அன்று கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருந்தனர். இந்தநிலையில் இன்று எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மல்லிகா தலைமையில் கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடலையூர் வருவாய் ஆய்வாளர், மீனாட்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் எம்.குமரெட்டியாபுரம் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்,

1. நிலவியல் பாதையை செய்து தர வேண்டும்.

2. ஆடு, மாடு, வண்டி, டிராக்டர் செல்வதற்கு பாதை வசதி செய்து தர வேண்டும்.

3. குவாரி நடைபெறும் இடத்தை நில அளவீடு செய்து கல்நட்டி அந்த இடத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

4. குவாரிக்கு பாத்தியப்பட்ட நிலம் போக மீதியிடத்தில் குவித்து வைத்த மணல் குவியலை அகற்ற வேண்டும்.

5. 5 ஏக்கர் புன்செய் நிலத்தில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற கால்வாய் நீர்வரத்தினை ஏற்படுத்தி பாலம் கட்டித்தர வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை 15 நாட்களுக்குள் (27/06/2023) முடித்து தர வேண்டும் என எம்.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் சார்பில் சமாதான கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.


மேலும் குவாரி உரிமையாளர் கிராம கணக்கின்படி, குவாரி செயல்படும் என்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டு செயல்படும் என உறுதி அளித்தார். இதனால் கிராம மக்கள் சார்பில் வருகின்ற 14-ஆம் தேதி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கிராம மக்கள் தெரிவித்தனர்.