தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கடற்கரை பகுதியில் 40க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள 3000க்கும் மேற்பட்ட மக்கள் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள மீனவர்கள் 200க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் 40க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலமாக மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் இந்த கடற்கரை பகுதியில் ஏற்பட்ட கடல் அரிப்பு மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவ மக்கள் கடுமையான பாதிக்குள்ளாகி வந்தனர். கடல் கொந்தளிப்பு காரணமாக படகுகள் சேதமடைவதை தவிர்க்கவும், கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்கவும் தூண்டில் வளைவு கல் பாலம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். மீனவர்களின் நீண்ட கால போராட்டத்திற்குப்பின் அவர்களது கோரிக்கையை ஏற்று வேம்பாரில் ரூ.14.20 கோடி மதிப்பில், தூண்டில் வளைவு கல் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன் விளைவாக வேம்பார் கடற்கரையிலிருந்து கடலுக்குள் மொத்தமாக 870 மீட்டர் தொலைவுக்கு பெரிய கருங்கற்களை கொண்டு 2015-ல் தொடங்கிய தூண்டில் வளைவு கல் பாலம் அமைக்கும் பணி 2017-ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. அதன்படி, அமைக்கப்பட்ட கல்ப்பாலம் 3 அடுக்குகளாக அமைந்துள்ளது. 1-ஆவது கல் பாலம் கடலுக்குள் 170 மீட்டர் தொலைவுக்கும், 2-ஆவது பாலம் கடலுக்குள் 200 மீட்டர் தொலைவுக்கும், 3-ஆவது பாலம் கடலுக்குள் 500 மீட்டர் தொலைவுக்கும் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 3 ஆவது கல் பாலம் கடற்கரை மாதா கோயிலுக்கு மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
இதனருகில் "T" பாலம் என்று அழைக்கப்படும் மீன்பிடி இறங்கு தளமும் அமைக்கப்பட்டுள்ளது. இவைகள் அமைக்கப்படும் பொழுது இது சரியான இடத்தில் முறையாக அமைக்கப்படவில்லை எனவும் மாற்று இடத்தில் அமைக்கப்பட வேண்டுமென்றும் வேம்பார் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர் அதையும் மீறி தமிழக அரசு இவ்விரண்டையும் அமைத்தது. புதிதாக அமைக்கப்பட்ட கல் பாலத்தின் மூலம் வேம்பார் கடற்கரையின் கிழக்குப் பகுதியில் கடலரிப்பு சற்று குறைந்திருந்தாலும், மேற்கு பகுதியில் தொடர்ந்து கடல் அரிப்பும், சீற்றமும் ஏற்பட்டுதான் வருகிறது.
இதனால் இப்பகுதியில் நங்கூரம் மூலம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகள் கடலில் வீசும் அதிவேகமான காற்றின் காரணமாக படகுகள் ஒன்றோடொன்றும், அருகில் இருக்கும் "T" பாலத்தின் (மீன்பிடி இறங்குதளம்) மீதும் மோதி அடிக்கடி சேதமடைந்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வேம்பார் கடலில் கரையில் இருந்து சிறிது தூரத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேம்பாரைச் சேர்ந்த மீனவர் அந்தோணி அருளப்பன் என்பவருக்கு சொந்தமான ரூ.20 லட்சம் மதிப்புள்ள விசைப்படகு கடலில் மூழ்கி படகின் இன்ஜின், வலை, படகின் பல்வேறு பாகங்கள் என முற்றிலும் சேதமடைந்துள்ளது. அதனை அப்பகுதி மீனவர்கள் 2 ஜேசிபி வாகனங்கள் கொண்டு கரைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் படகை வைத்து தொழில் செய்து வந்த மீனவரின் வாழ்வாதாரம் பாதிக்காதவாறு தமிழக அரசு மீனவருக்கு உதவ வேண்டும் என்பதோடு மட்டுமின்றி, இதுபோன்று தொடரும் படகுகள் சேலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க 2-வதாக(நடுவில்) அமைந்துள்ள தூண்டில் வளைவு கல் பாலத்தை நீட்டிப்பு செய்து மேற்குப்புறமாக வளைத்துத்தர வேண்டும் என்றும், அவ்வாறு அமைத்தால் மட்டுமே படகுகள் சேதமடைவதை தவிர்க்கலாம் என மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆகையால் தமிழக அரசு உடனடியாக தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வேம்பார் மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதேபோன்று இப்பகுதியில் அமைந்துள்ள "T" பாலத்தில் (மீன்பிடி இறங்குதளம்) குறைவான படகுகள் மட்டுமே நிறுத்தக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது, அதையும் நீட்டிப்பு செய்து கூடுதலான படகுகள் நிறுத்தி வைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது மீனவர்களின் தலையாய கோரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.