கழிவு நீர் செல்ல வழியில்லை - சுகாதார சீர்கோடு - தொற்று நோய்களால் அவதிப்படும் குழந்தைகள் - கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள் - வீட்டு சாவியை அரசிடம் ஒப்படைக்க மக்கள் முடிவு - கோவில்பட்டி அருகே மக்களின் பரிதாபம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதி இ.பி.காலனியில் கழிவு நீர் செல்வதை தனிநபர் தடுத்து நிறுத்தியதால் ஒவ்வொரு வீடுகள் முன்பும் கழிவு நீர் குட்டைபோல் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் மற்றும் தொற்று நோய்களால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வீட்டு சாவியை ஒப்படைத்து விட்டு அங்கேயே குடியேறும் போராட்டத்தில் ஈடுபடபோவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதி இ.பி.காலனி. இங்குள்ள 8 தெருக்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் வாசித்து வருகின்றனர். இதில் 5வது தெருவில் அமைக்கப்பட்டுள்ள வாறுகால் மூலமாக சென்ற கழிவு நீர் அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்திற்கு சென்று வந்தாக கூறப்படுகிறது. இதனை கடந்த ஓராண்டு முன்பு தனிநபர் ஒருவர் கழிவு நீர் செல்வதை தடுத்த காரணத்தினால் கழிவு நீர் செல்ல வழியில்லமால் 5வது தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கு முன்பும் குட்டை போல் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசி வருவது மட்டுமின்றி, காய்ச்சல், வயிற்று போக்கு என பலவிதமான தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கழிவு நீர் தேங்கி நிற்கமால் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி அலுவலகம் என பலரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கமால் இருந்து வருவதாக அப்பகுதி பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். துர்நாற்றித்தினால் தினந்தோறும் சாப்பிட கூட முடியமால் அவதிப்பட்டு வருவதாகவும், இனியாவது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால், தங்களது வீட்டின் சாவிகளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழங்கி விட்டு அங்கு குடியேறும் போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்