தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கச்சேரி தளவாய்புரத்தினை சேர்ந்த முனியாண்டி மகன் முருகாண்டி. இவர் மரம் வெட்டு தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வடக்கு கைலாசபுரத்தில் தனது உறவினர் வீட்டில் துக்க நிகழ்விற்கு தனது கிராமத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அங்கு சென்றதும் திடீரென முருகாண்டிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையெடுத்து அவரது உறவினர்கள் முருகாண்டியை பசுவந்தனையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கபட்டது. மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஊழியர்கள் கூறியுள்ளனர். மேலும் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவலும் கொடுத்துள்ளனர். சுமார் 50 நிமிடங்கள் கழித்து கீழஈராலில் இருந்து 108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததாக தெரிகிறது. ஆனால் அதற்குள்ளாக முருகாண்டி சிகிச்சை பலன் இல்லமால் உயிரிழந்து விட்டார். 108 ஆம்புலன்ஸ் சீக்கிரம் வந்து இருந்தால் முருகாண்டியை காப்பாற்றி இருக்கலாம் என்று உறவினர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பசுவந்தனையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் எங்கே போய் விட்டது என்று கேட்ட போது, டிரைவர், மருத்துவ பணியாளர் இல்லமால் 108 ஆம்புலன்ஸ் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பின்புறம் நின்று இருந்தது தெரியவந்தது. இதையெடுத்து ஆத்திரமடைந்த முருகாண்டி உறவினர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்தும் பசுவந்தனை போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். பசுவந்னையில் 108 ஆம்புலன்ஸ் இருந்தும் பணியாளர்கள் இல்லை என்பதால் சரியான சிகிச்சை அளிக்க முடியமால் மரம் வெட்டு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது முதல் சம்பவம் கிடையாது பல முறை இது போன்று நடந்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு சென்று அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இனிமேல் இது போன்று நடைபெறமால் இருக்க நிரந்தரமாக பணியாளர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து 108 ஆம்புலன்ஸ் மாவட்ட நிர்வாகியிடம் கேட்ட போது பணியாளர் இல்லை என்ற அலட்சியமான பதில் தான் வருகிறது. 108 ஆம்புலன்ஸ் இருந்து வெறும்காட்சி பொருளாக இருப்பதால் சரியான நேரத்திற்கு சிகிச்சை கிடைக்கமால் பலர் உயிர் இழந்து வரும் நிலை நீடித்து வருவதால் நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பசுவந்தனை பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்...