முதலாளியைக் கொன்று கார் டிக்கியில் வைத்து எரித்த டிரைவர் உட்பட 4 பேர் கைது : சடலத்துடன் நகரில் உலா : பணத்திற்காகத்தான் கொலையா? - நீடிக்கும் மர்மம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் (07.09.2023) மாலை 6.30 மணியளவில், சந்தேகத்திற்கிடமான வகையில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதைக்கண்ட அப்பகுதி வழியாக ஆடு மேய்த்துவிட்டுச்சென்ற ஒருவர் அக்கம்பக்கத்தில் தெரிவிக்க அங்கிருந்தவர்கள் உடனடியாக விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கும், குளத்தூர் காவல் நிலைய போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த காரின் அருகில் சென்று பாரத்தபோது, காரின் பின்பக்க டிக்கியில் ஆணா? பெண்ணா? என்று அடையாளம் காணமுடியாத வகையில் சடலம் பாதி எரிந்து கருகிய நிலையில் எரிந்து இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக தீயை அணைத்து அப்பகுதியில் இதுபற்றி விசாரணை நடத்தினர். இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு நேரிடையாக வந்து காரில் எரிந்த நிலையில் இருந்த சடலத்தை பார்வையிட்டு தனிப்படை அமைத்து இறந்த நபர் யார்?, கொலை செய்த குற்றவாளிகள் யார்? என்றும் உடனடியாக கண்டுபிடிக்குமாறு தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. தடயவியல் நிபுணர்கள் கார் டிக்கியிலிருந்து பாதிக்குமேல் எரிந்து எலும்புக்கூடான நிலையில் சடலத்தை கைப்பற்றி ஆய்வு செய்ததில், கழுத்தில் அணிந்திருந்த செயின் மற்றும் இடுப்பில் அணிந்திருந்த வெள்ளி அரைஞாண் கயிற்றை வைத்து இறந்த நபர் ஆண்தான் என்பதை உறுதி செய்தனர். மேலும் கழுத்து எலும்பு பகுதியில் முறிவு ஏற்ப்பட்டிருப்பதைக் கண்டு இறந்த நபர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.
அதேசமயம் போலீசார் தீப்பற்றி எரிந்த காரின் வாகனப்பதிவெண்ணை (TN64 F1587) வைத்து காரின் உரிமையாளர் நாகஜோதி என்பதைக்கண்டறிந்தனர். அதுமட்டுமின்றி சம்பவ இடத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட செல்போனை வைத்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரின் மகன் நாகஜோதி என்ற 48 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காரில் அவரது டிரைவருடன் சென்ற நிலையில் காணவில்லை என்று அவரது குடும்பத்தினரால் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனால் கார் டிக்கியில் வைத்து எரித்து கொலை செய்யப்பட்டிருக்கும் ஆண் நாகஜோதிதான் என உறுதி செய்து கொலை செய்த போலீசார் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேட புறப்பட்டனர்.
அப்போது இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலையத்தில், நாகஜோதியை காணவில்லை என அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், சாயல்குடி போலீசார் நாகஜோதியின் கார் டிரைவரான கன்னிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த அண்ணாவி என்பவரின் மகன் மைக்கேல் ராஜ் மற்றும் அவரது உடன் பிறந்த சகோதரர் குழந்தைக்கனி ஆகிய இருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்திருப்பது விளாத்திகுளம் தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது...பின் உடனடியாக அங்கு சென்ற போலீசார் நாகஜோதி காருடன் சேர்த்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து... இவ்வழக்கில் தொடர்புடைய உறைகிணறு பகுதியைச் சேர்ந்த மைக்கேல் ராஜ் என்ற மாரி மற்றும் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த சுந்தர கணபதி ஆகிய 2 பேர் என மொத்தமாக 4 பேரையும் கைது செய்து தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.... போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன...இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள இளஞ்செம்பூர் பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் நாகஜோதி (48) என்ற பிரபல பைனான்சியர் தனது குடும்பத்துடன் சாயல்குடியில் வாழ்ந்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பெரிய அளவில் வட்டிக்கு பணத்தை கொடுத்து பைனான்ஸ் செய்து வந்துள்ளார். இவரிடம் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த அண்ணாவி மகன் மைக்கேல் ராஜ் கார் டிரைவராக (acting driver) 2 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வந்துள்ளார். மைக்கேல் ராஜ், தனது பணத்தேவைக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாகஜோதியிடம் ரூ.2 லட்சம் பணம் வட்டிக்கு வாங்கியிருந்துள்ளார். நாகஜோதியும் தனது நம்பிக்கைக்குரிய நபர் என்ற முறையில் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை வாங்கியது முதல் தற்போது வரை மைக்கேல் ராஜ் பணத்திற்கு எந்த வட்டியும் கொடுக்கவில்லை என்பதால் அடிக்கடி மைக்கேல் ராஜிடம், கொலை செய்யப்பட்ட நாகஜோதி கேட்டுவந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக டிரைவர் மைக்கேல் ராஜ் தனது ஓனரான பைனான்சியர் நாகஜோதியை தீர்த்துக்கட்ட முடிவு செய்து தக்க சந்தர்ப்த்தை காத்துக்கொண்டிருந்தபோது... நேற்று முன்தினம்(07.09.2023) காலை 8 மணியளவில் நாகஜோதிக்கு போன் செய்து விளாத்திகுளத்தில் தனக்கு பணம் வரவேண்டியுள்ளது என்றும், தன்னுடன் வந்தால் அதை வாங்கி உங்கள் கடனை கொடுத்துவிடுகிறேன் எனக்கூறி நாகஜோதியை அழைத்துள்ளார். பின்னர் நாகஜோதியும், அவரின் கார் டிரைவர் மைக்கேல் ராஜ் இருவரும் புறப்பட்டு விளாத்திகுளம் நோக்கி வந்துள்ளனர். வரும் வழியில் தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியில் மைக்கேல் ராஜ் அவரது திட்டத்தின்படி, (அவரது உடன் பிறந்த சகோதரர் குழந்தைக்கனி, உறவுக்காரர்காளான மிக்கேல் ராஜ் என்ற மாரி மற்றும் சுந்தர கணபதி ஆகிய 3 பேரை காரில் ஏற்றிக்கொண்டு விளாத்திகுளம் நோக்கி வந்துள்ளனர். சூரங்குடியில் இருந்து கார் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே குமாரசக்கனபுரம் கிராமம் அருகில் காரில் வைத்தே கயிற்றைக்கொண்டு நாகஜோதியின் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்ததோடு நாகஜோதியின் செல்போனை அனைத்து வைத்துள்ளனர். பின்னர் சடலத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று அங்கிருந்து நாகஜோதியின் சடலத்தோடு புறப்பட்டு விளாத்திகுளத்திற்கு வந்து பேருந்து நிலையம், எட்டையபுரம் ரோடு வழியாக பேரிலோவன்பட்டி செல்லும் வழியில் சடலத்தை அப்புறப்படுத்த எண்ணி சென்றுள்ளனர். அங்கு ஆள் நடமாட்டம் இருந்த காரணத்தால், நாகஜோதியின் உடலை காரின் உள்பகுதியில் இருந்து தூக்கி டிக்கியில் வைத்துள்ளனர். பின் அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு விளாத்திகுளம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். 2 பேர் காரில் இருக்க...2 மட்டும் பேருந்தில் கன்னிராஜபுரம் சென்று டாடா ஏசிஇ மேஜிக் வாகனத்தை எடுத்துவரச் சென்றுள்ளனர். இதையடுத்து மீண்டும் காரை எடுத்துக்கொண்டு குளத்தூர் வழியாக சென்று கலைஞானபுரம் காட்டுப்பகுதிக்கு உடலை கொண்டு சென்றுள்ளனர். அதே சமயம் மற்ற இருவர் மற்றொரு வாகனத்தில் (டாடா ஏசிஇ மேஜிக்) குளத்தூர் சென்று நாகஜோதியின் உடலை எரிப்பதற்கு விறகு மற்றும் பெட்ரோல் வாங்கி வந்துள்ளனர். தொடர்ந்து... பிரபல பைனான்சியர் நாகஜோதியை அவரது காரிலேயே டிக்கியில் வைத்து விறகு மற்றும் பெட்ரோல் கொண்டு எரித்துள்ளனர். அப்போது திடீரென காரில் இருந்த"FIRE ALARM" சத்தம் போட்டவுடன் குற்றவாளிகளான 4 பேரும் தலைதெறிக்க ஓடி தாங்கள் கொண்டு வந்த வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, கொலை செய்துவிட்டு தப்பியோடிய 4 பேரும் செல்லும் வழியில் எதுவுமே நடக்காததுபோல கடற்கரைக்குச் சென்று கடலில் குளித்து விட்டு சென்றதாக போலீசார் விசாரணையின் போது கூறியதாக சொல்லப்படுகிறது.
(இதற்கிடையில் பைனாசியர் நாகஜோதியின் மனைவி தனது கணவர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்து இருப்பதால், உடன் சென்ற டிரைவர் மைக்கேல் ராஜிடம் போன் செய்து கேட்டுள்ளார். அதற்கு மைக்கேல் ராஜ் தனக்கு தெரியாது...நான் அப்போதே வந்துவிட்டதாக கூறியதால் சந்தேகமடைந்த நாகஜோதியின் மனைவி சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் போலீசார் இருவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்ததுள்ளது.)
-காவல்துறையினருக்கு குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்ற முனைப்பை விட.... கார் டிக்கியில் பைனான்சியர் நாகஜோதி எரிக்கப்பட்ட இடம் வைப்பார் கிராம மாலில் வருகிறதா? அல்லது பல்லாகுளம் மாலில் வருகிறதா? என்ற குழப்பத்தில் இரு கிராம உதவியாளர்களும் சம்பவ இடத்திலேயே சடலத்தின் அருகில் வரைபடத்தாளை (Map) தரையில் வைத்து டார்ச் லைட் ஒளியில் இடத்தை பங்கீடு செய்து வருவாய் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு மன்றாடிக்கொண்டது அங்கிருந்த காவல்துறையினரருக்கு ஆத்திரத்தை தான் கிளப்பியது என்றே சொல்லலாம்... இருப்பினும் இவ்வளவு பெரிய பைனான்சியர் வெறும் ரூ.2 லட்சம் பணத்திற்காகத்தான் கொலை செய்யப்பட்டாரா? அல்லது இதில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? போன்ற மர்ம முடிச்சுக்கள் போலீசாரின் வெளிப்படையான விசாரணையில்தான் தெரியவரும்......