விளாத்திகுளத்தில், ரூ.1.60 கோடி மதிப்பில் புதிதாக 1000 மெட்ரிக் டன் கிட்டங்கி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா : மூன்றே நிமிடங்களில் நிகழ்ச்சியை முடித்த கனிமொழி எம்.பி.! விளாத்திகுளம் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் ரூ.1  கோடியே 60 இலட்சம் மதிப்பில் புதிதாக 1000 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட நவீன கிட்டங்கி அமைக்க டெண்டர் விடப்பட்டு இன்று அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். இந்த அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்கு காலை‌ 10.26‌ மணிக்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மூன்றே நிமிடங்களில் அவசர அவசரமாக சென்று செங்கலை எடுத்து வைத்துவிட்டு 10.29க்கு காரில் ஏறி கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சிக்கு கிளம்பினார். இதனால் மொத்த நிகழச்சியுமே கனிமொழி எம்.பி. வந்து சென்றதைப்போல "சட்டென தொடங்கி பட்டென முடிந்தது..."

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரெல்லாம் வருவதால், வேளாண்மை துறை அதிகாரிகள் சாமியானா பந்தல், சேர், டெக்கரேசன், மைக்-ரேடியோ செட் தொடங்கி டீ, ஸ்நாக்ஸ் வரை பார்த்து பார்த்து செலவு செய்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், எம்‌.பி., அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் என‌ அனைவரும் உடனடியாக நிற்காமல் கூட சென்றது நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. இதனால் நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த டீ, ஸ்நாக்ஸை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே சாப்பிட்டுக்கொண்டு "இதுக்கு இவ்வளவு செலவு பண்ணிட்டோமே" என்று முனுமுனுத்துக்கொண்டனர்.... விளாத்திகுளம் பகுதி விவசாய பொது மக்களுக்காக கொண்டு வரும்  திட்ட அடிக்கல் நாட்டு விழாவை  விடுமுறை அல்லாத நாட்களில்  விவசாயிகள் முன்னிலையில் நடத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது விளாத்திகளும் தொகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. மக்கள் வரிப்பணத்தில்  மக்களுக்காக கொண்டு வரும் திட்டம் எந்தவித பொது மக்களையும் அழைக்காமல் விரைவாக அடிக்கல் நாட்டும் பணியை   முடிக்க என்ன காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.