தமிழக முதல்வர் திறந்து வைத்த பஸ் நிலையத்திற்கு அரசு பஸ் இயக்காத அதிகாரிகளை கண்டித்து  தேசிய நெடுஞ்சாலையில் மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் 6 பேர் கைது . கோவில்பட்டி புறவழிச்சாலையில் கடந்த 2007-ம் ஆண்டு புதிய கூடுதல் பஸ் நிலையம் திறக்கப்பட்டது. அப்போது  அமைச்சராக இருந்த தற்போதைய. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது, அண்ணா பஸ் நிலையம் முதல் கூடுதல் பஸ் நிலையம் வரை சுற்று வட்டார பஸ் இயக்கப்படும். இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அனைத்து பேருந்துகளும் கோவில்பட்டி ஊருக்குள் உள்ள அண்ணா பஸ் நிலையத்துக்கு சென்று, பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் அப்போதைய மாவட்ட ஆட்சியர் தலைமையில் எடுக்கப்பட்டன. இதில், சுற்று வட்டார பஸ் மட்டும் இயக்கப்பட்டு, நாளடைவில் நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால், இரவு 8 மணிக்கு மேல் அனைத்து பேருந்துகளும் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும் என்ற உத்தரவு மட்டும் அமலாகிவில்லை. இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை செயல்படுத்த வலியுறுத்தி த. மா. கா சார்பில் கோட்டாட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. அதன் பின்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அனைத்து பேருந்துகளும் இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை கோவில்பட்டி ஊருக்குள் உள்ள அண்ணா பஸ் நிலையத்துக்கு வந்து செல்ல வலியுறுத்தி மாடுகளுடன் நான்குவழிச்சாலையில் மறியல் போராட்டம்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடியில் த.மா.க தலைவர் ஜி.கே. வாசனை பார்த்து விட்டு கோவில்பட்டிக்கு திரும்பி கொண்டிருந்த போது எட்டயபுரம் குமாரகிரி அருகே 4 காவல்துறை உதவி ஆய்வாளர்கள். தலைமையிலான காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ராஜகோபால், மாவட்ட இளைஞரணி தலைவர் கனி ,கோவில்பட்டி வட்டார தலைவர் ஆழ்வார்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன், நகர பொருளாளர் செண்பகராஜ், துணை செயலாளர் ஜான் கென்னடி உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து கோவில்பட்டி இனாம்மணியாச்சி தாமரை மஹாலில் வைத்துள்ளனர்.