விளாத்திகுளம் உட்கோட்டத்தில், மேலும் ஒரு SI-யை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் உட்கோட்டத்தில் தொடர்ச்சியாக உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர், முதல் நிலை காவலர் என பலர் பாலியல் புகார் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனின் அதிரடி நடவடிக்கையின்படி, மாவட்ட ஆயுதப்படைக்கும், பணியிட மாற்றமும் செய்யப்பட்டு வந்தனர். இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் உட்கோட்டம் காடல்குடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த மாரிமுத்து என்பவர் தற்போது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, உதவி ஆய்வாளர் மாரிமுத்து, இப்பகுதியில் முக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் குற்றவாளியுடன் தொடர்பில் இருந்து வந்ததால்தான் ஆயுதப் படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி உதவி ஆய்வாளர் மாரிமுத்துவிற்கு வேறு சில பெண்களுடன் இருந்த தகாத உறவும் அதிரடியாக ஆயுதப்படை மாற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது... 

ஏற்கனவே, விளாத்திகுளம் காவல் உட்கோட்டத்தில் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் பற்றாக்குறை இருக்கும் நிலையில், இதுபோன்று தொடர்ச்சியாக உதவி ஆய்வாளர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டு வருவதால் விளாத்திகுளம் உட்கோட்டத்தில் சட்டம் - ஒழுங்கு? கேள்விக்குறியாகவும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஆகையால் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபடும் போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்துவரும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், அந்தந்த காவல் நிலையங்களில் காலியாகும் அந்த பணியிடத்திற்கு உடனடியாக ஆய்வாளர், உதவி ஆய்வாளர்களை பணி நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.