பருத்தியில் நோய்த்தாக்கம்: வெளிநாட்டிலிருந்து இறக்குமதியால் விலையும் இல்லை என விவசாயிகள் புலம்பல்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் இந்தாண்டு விவசாயிகள் ஆயிரத்திற்கும் அதிகான ஏக்கரில் பருத்தி விவசாயம் செய்துள்ளனர். இப்பகுதியில் போதிய மழையின்மை மற்றும் பருத்தியில் நோய்த்தாக்கம் போன்ற காரணங்களால் பெரும்பாலான பருத்திச் செடிகள் வளர்ச்சியின்றியும், காய்கள் பிடிக்காமலும் காய்ந்து காணப்படுகின்றன.
எஞ்சிய சில செடிகளிலாவது வந்த பருத்தியையும் வியாபாரிகள் மிகக்குறைந்த விலைக்கே வாங்கிச்செல்கின்றனர். கடந்த ஆண்டு ரூ.12 ஆயிரம் வரை இருந்த நிலையில் இந்த ஆண்டு ரூ.5000-க்குதான் வாங்குவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் பருத்தி எடுக்க வரும் வேலை ஆட்களுக்கு கூட கூலி கொடுக்க முடியாத நிலை இருப்பதாகவும்,
அதுமட்டுமின்றி வெளிநாட்டு பருத்தி இறக்குமதி காரணமாக உள்நாட்டு பருத்தியின் விலை பெருமளவில் குறைந்ததற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. எனவே தமிழக அரசு வெளிநாட்டிலிருந்து பருத்தியை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து உள்நாட்டுப் பருத்தி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பருத்தி விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், போதிய மழையின்மை, நோய் தாக்கம், விலை குறைவு போன்ற காரணங்களால் பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கும் இப்பகுதி விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.