தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள அம்மன்புரம் பகுதியில் வசித்துவரக்கூடிய  பழங்குடியினர் சமூகத்தில் காட்டுநாயக்கர்  வகுப்பைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் தனது கணவருடன் வசித்து வருகிறார்.  இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் சரஸ்வதி கடந்த சில வருடங்களாக சாதி சான்றிதழ் கேட்டு பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை ஜாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை . தற்போது இவரது மகன் பூவலிங்கம் 12-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். நடந்து முடிந்த +2 பொது தேர்வில் 508/600 என  85% சதவீத மதிப்பெண் எடுத்துள்ளார். தொடர்ந்து உயர்கல்விக்காக கல்லூரிகளில் சேர்க்கைக்கு சாதி சான்றிதழ் கிடைக்காததால் உயர்கல்வியில் சேர முடியவில்லை தவித்து வருகிறார்.

இதன் காரணமாக சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் கோரிக்கை மனு அளிப்பதற்காக தனது குழந்தைகளுடன் அலுவலகம் வந்தார். அலுவலகத்தில்  வருவாய் கோட்டாட்சியர் இல்லாத சூழலில்  புகார் மனுக்களை வாங்கக்கூட  ஆள் இல்லாததால் அலுவலகத்தில் உள்ள அலுவலர்களுடன்  வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் கடந்த முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த போது திருச்செந்தூர் வட்டாட்சியர் விசாரணை செய்து சாதி சான்றிதழ் வழங்கலாம் என பரிந்துரை அளித்துள்ளார். இருந்தும்  வருவாய் கோட்டாட்சியர் ஜாதி சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிப்பதாக மாணவனின் தாயார் வேதனை தெரிவித்துள்ளார். சாதி சான்றிதழ் வழங்காமல் கால தாமதமாக்குவதால் மாணவன்,  "தனது உயர்கல்வியை தொடர முடியவில்லை என்றால்... உயிரை மாய்த்துக் கொள்வேன் எனவும், மேலும் எனது மரணம் எனது தங்கை உட்பட பலருக்கு சாதி சான்றிதழ் வழங்க வழிவகை செய்யும் என உருக்கமாக பேசுவதாகவும்  மாணவனின் தாயார் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார் மாணவனின் தாயார் சரஸ்வதி". ஆகவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தனது மகனின் உயர்கல்விகாக சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.