ஆந்திர மாநிலம் அனகாபள்ளி அருகே பீர் பாட்டில்கள் ஏற்றி வந்த வேன் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அடுத்து சிதறிய பீர் பாட்டில்களை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் போட்டி போட்டு அள்ளிச் சென்ற சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் அனகாபள்ளியில் உள்ள குடோனிலிருந்து நர்சப்பட்டினம் என்ற பகுதிக்கு பீர் பாட்டில்கள் லோடு ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. காசிங்கோட்டா மண்டலத்தில் உள்ள பையாவரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் பீர் பாட்டில்களோடு சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் இருந்த நூற்றுக்கணக்கான பீர்பாட்டில் பெட்டிகள் கீழே விழுந்து சிதறின. வேன் கவிழ்ந்ததில் சில பெட்டிகளில் இருந்த பீர்பாட்டில்கள் உடைந்தன. பெரும்பாலான பெட்டிகள் உடையாமல் சிதறிக் கிடந்தன.

இதனை அடுத்து நடுரோட்டில் பீர் பாட்டில்கள் பெட்டி பெட்டியாக கிடந்ததை பார்த்த அந்த பகுதி மக்கள் போட்டி போட்டுக்கொண்டு ஓடி வந்து பீர் பாட்டில்களை அள்ளி சென்றனர். இதனால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது. கிடைத்தவரை இரண்டு கைகளிலும் பலர் பீர் பாட்டில்களை அள்ளிச்செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு சிலர் பெட்டி பெட்டியாக பீர்பாட்டில்களை எடுத்து சென்றனர். 

நடுரோட்டில் எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்த நிலையில் டிரைவருக்கு என்ன ஆச்சு என்பதை பற்றி ஒரு குடிமகன்கள் கூட கவலை கொள்ளாமல் பீர் பாட்டில்களை எடுத்துக்கொண்டு செல்வதிலேயே கவனத்துடன் இருந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.