விளாத்திகுளத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 சாலை விபத்துக்கள் : கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் ரோட்டில், இன்று மதியம் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதைத்தொடர்ந்து இன்று மாலையில் அதே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் மற்றும் பெயிண்டர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்... ஒரே நாளில் ஒரே சாலையில் நடந்த இரு வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர்கள் உட்பட மூன்று பேர் பலியான சம்பவம் விளாத்திகுளம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் ரோட்டில் அமைந்துள்ள தண்ணீர் டேங்க் அருகில் இன்று மதியம் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பேரிலோவன்பட்டி துணை ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தையும், டிரைவரையும் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மாலை 7 மணி அளவில் அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகராஜ் (பெயிண்டர்) மற்றும் அவரது உறவினரான சண்முகம் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் அரியநாயகிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, வேம்பாரில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்ற சுடலைமணி மற்றும் மதன்குமார் ஆகிய 2 கல்லூரி மாணவர்கள் வந்த இருசக்கர வாகனமும் - சண்முகராஜ் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவன் சுடலைமணி மற்றும் பெயிண்டர் சண்முகராஜ் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த மற்றொரு மாணவர் மதன்குமார் மற்றும் சண்முகம் ஆகிய இருவரும் மேல் சிரித்துக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர், இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவன் சுடலைமணி மற்றும் பெயிண்டர் சண்முகராஜ் ஆகிய இருவரின் உடல்களைப் பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.