வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக தாக்கி இருசக்கர வாகனத்தை தீயிட்டு எரித்து சேதப்படுத்திய 3 பேர் கைது?

தூத்துக்குடி கே.வி.கே நகர் பகுதியைச் சேர்ந்த ஷெரீப் மகன் முகமது அன்வர் ஷா (28) என்பவருக்கும் தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் கண்ணபெருமாள் (எ) டெல்லா கண்ணா (23) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் முகமது அன்வர் ஷா இன்று (05.06.2023) வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னகரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த கண்ணபெருமாள் (எ) டெல்லா கண்ணா மற்றும் அவரது நண்பர்களான தூத்துக்குடி பொன்சுப்பையாநகர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மகன் செல்வபெருமாள் (எ) கட்ட பெருமாள் (22), தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் காளிமுத்து ஓம் மாரி (21) ஆகியோர் முகமது அன்வர்ஷாவை வழிமறித்து தகராறு செய்து கத்தியால் தாக்கியும், அவரது இருசக்கர வாகனத்தை தீயிட்டு எரித்தும், மேலும் அங்கு இருந்த ஒரு காரையும் சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

இதுகுறித்து முகமது அன்வர் ஷா அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. குமரேசன் வழக்கு பதிவு செய்து எதிரிகள் கண்ணபெருமாள் (எ) டெல்லா கண்ணா, செல்வபெருமாள் (எ) கட்ட பெருமாள் மற்றும் காளிமுத்து ஓம் மாரி ஆகிய 3 பேரையும் கைது செய்தார். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட எதிரிகளில் கண்ணபெருமாள் (எ) டெல்லா கண்ணா மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 2 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், செல்வபெருமாள் (எ) கட்ட பெருமாள் மீது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் வழக்கு உட்பட 3 வழக்குகளும், காளிமுத்து ஓம் மாரி மீது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உட்பட 3 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.