தூத்துக்குடி மாவட்டத்தில் தங்க நகைகளை அடகுவைத்து பணத்தை ஷேர்மார்க்கெட் மற்றும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பெற்று தருவதாக தங்க நகைகளை மோசடி செய்த 2 பெண்கள் உட்பட 3 எதிரிகள் கைது - சுமார் 25 லட்சம் மதிப்புள்ள சுமார் 69 பவுன் தங்க நகைகள் மீட்பு - மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் நடவடிக்கை.
தூத்துக்குடி புதியம்பத்தூர், நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்த செல்வம் மகன் மதன்குமார் என்பவரிடம், அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி கிரேனா (40), சுந்தரலிங்கம் மனைவி ஜெயலெட்சுமி (40) மற்றும் செல்லத்துரை மகன் பாக்கியராஜ் (25) ஆகிய 3 பேரும் சேர்ந்து தங்களிடம் தங்க நகைகளை கொடுத்தால், அதை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து அந்த பணத்தை ஷேர்மார்க்கெட், நிதி நிறுவனம் போன்றவற்றில் முதலீடு செய்து லாபம் ஈட்டித் தருவதாகவும், அவ்வாறு கொடுப்பவர்களிடம், 10 பவுன் நகை கொடுத்தால் 10 நாட்களில் நகையுடன் ரூபாய் 10,000/-மும் சேர்த்து கொடுப்பதாகவும், மேலும் 35 பவுன் நகை கொடுத்தால் கார் வாங்க முன்பணம் கட்டுவதாகவும் கூறியுள்ளனர். இதை நம்பிய மேற்படி மதன்குமார் கடந்த 06.05.2023 அன்று தனது தாய் மற்றும் சகோதரியிடமிருந்து 35 பவுன் தங்க நகைகளையும், கடந்த 09.05.2023 அன்று தனது உறவினர்களிடமிருந்து மேலும் 50 பவுன் தங்க நகைகளையும் வாங்கி கொடுத்துள்ளார். இதில் மதன்குமாருக்கு எதிரிகள் ரூபாய் 40,000/- பணம் மட்டுமே கொடுத்துவிட்டு, கார் வாங்க முன்பணமும் கட்டவில்லை. இதனால் சந்தேகமடைந்த மதன்குமார் கடந்த 26.06.2023 அன்று மேற்படி எதிரி கிரேனா என்வரின் வீட்டிற்கு சென்று நகைகளை தருமாறு கேட்டதற்கு, மேற்படி எதிரிகள் 3 பேரும் சேர்ந்து மதன்குமாரிடம் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதையறிந்த மதன்குமார் கடந்த 01.07.2023 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்களிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்;து விசாரணை மேற்கொண்டனர்.
மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜெயராம் அவர்கள் மேற்பார்வையில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் திருமதி. அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு. சண்முக சுந்தரம், திரு. ராஜ்குமார் மற்றும் மோகன் ஜோதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, மேற்படி எதிரிகளான கிரேனா, ஜெயலெட்சுமி மற்றும் பாக்கியராஜ் ஆகிய 3 பேரையும் நேற்று (10.07.2023) கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 25 லட்சம் மதிப்புள்ள சுமார் 69 பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் மேற்படி எதிரிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் 30 பேரிடம் இதேபோன்று பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டிதருவதாக கூறி 490 பவுன் தங்க நகைகளை மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.