விளாத்திகுளம் பகுதியில் போதிய மழையின்றி 1000 ஏக்கர் முருங்கை சாகுபடி பாதிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளான வைப்பார்,கோட்டைமேடு, சுப்பிரமணியபுரம், புளியங்குளம், விருசம்பட்டி, கோட்டநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் முருங்கை சாகுபடி செய்வது வழக்கம்.கடந்தாண்டு முருங்கைக்கு நல்ல விலை இருந்த காரணத்தினால் அதேபோன்று இந்தாண்டும் இப்பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன் முருங்கையை பயிர் செய்திருந்தனர்.ஆனால் விளாத்திகுளம் பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தினால், நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர்.

இதன் காரணமாக கடற்கரை அருகே உள்ள கிராமங்களான வைப்பார் ,கோட்டைமேடு, சுப்பிரமணியபுரம் பகுதிகளில் பெரும்பாலான முருங்கை மரங்களில் பூ பிடிக்காமலும், முருங்கைக்காய்கள் வளர்ச்சி இன்றியும் விளைச்சல் பெரிதும் பாதிப்படைந்து காணப்படுகிறது.

வழக்கமாக இப்பகுதியில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை காய்கறி சந்தைகளுக்கு டன் கணக்கில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது கிலோ கணக்கில் கொண்டு செல்வதாக விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். விளைச்சல் குறைவு ஒருபுறம் இருக்க... கடந்தாண்டு கிலோ ரூ.80 வரை இருந்த முருங்கை விலையும் தற்போது ரூ.25க்கு பெருமளவில் குறைந்திருப்பதால் முருங்கை சாகுபடி விவசாயிகள் தங்களால் போட்ட பணத்தை கூட எடுக்க முடியவில்லை என்றும், வேலையாட்களுக்கு கூலி கூட கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் தெரிவித்தனர்.

மேலும், மற்ற பயிர்களுக்கு வழங்கப்படுவதைப் போல தோட்டப்பயிரான முருங்கையையும் பயிர் காப்பீட்டு் பட்டியலில் இணைத்து முருங்கை சாகுபடி விவசாயிகளும் பயிர் காப்பீடு பெற வழிவகை செய்ய வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.