விளாத்திகுளம் அருகே நாம் தமிழர் கட்சி கலந்தாய்வுக் கூட்டத்தில், குடிபோதையில் இருந்த நபரை அடித்து தூக்கி வீசிய கட்சி பவுன்சர்கள் - போலீசாரிடம் கட்சியினர் வாக்குவாதம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாவட்டக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம், கோவில்பட்டி மக ஒட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கு வருகை தந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எட்டையபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து எட்டையபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டத்தில் மாற்றுக்கட்சியினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டனர். பின்னர் சிறிது நேரத்தில் மண்டபத்தின் கதவு, ஜன்னல்கள் அனைத்தும் பூட்டியபடி, மாவட்ட கலந்தாய்வு கூட்டமா? அல்லது ரகசிய கூட்டமா என்ற அளவில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சீமான் பேச தொடங்கி உள்ளார். இதில் செய்தியாளர்கள், காவல்துறையினர் என யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மது போதையில் இருந்ததாக எட்டயபுரம் அருகே உள்ள நடுவற்பட்டியைச் சேர்ந்த காளிதாஸ் என்ற நபரை கூட்டத்திற்கு வந்திருந்த பவுன்சர்கள் மற்றும் கட்சியினர் அடித்து அவரை தூக்கிக்கொண்டு வந்து மண்டபத்தின் வாசலில் போட்டனர். அப்போது மண்டபத்தின் வாசலில் இருந்த போலீசார், "இப்படி அடித்து தூக்கி போடுறீங்களே...அவருக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு" என கேட்டதால் கட்சியினர் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காளிதாஸை காவல்துறையினர் கட்சியினரிடமிருந்து மீட்டு வெளியே அனுப்பி வைத்தனர்.

மேலும் மாவட்ட கலந்தாய் கூட்டம் என்ற பெயரில் மண்டபத்தின் கதவு, ஜன்னல்களையெல்லாம் பூட்டிக்கொண்டு ரகசியமாக கூட்டம் நடத்தவேண்டிய தேவை என்னவென்று கேள்வி எழுவதோடு மட்டுமின்றி கட்சியினரின் இத்தகைய செயல்கள் அங்கிருந்த செய்தியாளர்கள் மற்றும் காவல்துறையினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.