தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டும் வரும் பேருந்து நிலையம் குடிமகன்களின் ஸ்மார்ட் பாராக மாறிவரும் அவலம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் கடந்த 2018 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு 2019 ஜூன் முதல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 53 கோடியே 4 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த புதிய பேருந்து நிலையம் நான்கு அடுக்கு கட்டிடத்தில் தரை தளத்தில் பேருந்துகள் நிறுத்துமிடம் மேல் தளத்தில் இருசக்கர வாகனங்களும் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்டு அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் இந்த பணி தரம் இல்லாத பொருட்களை பயன்படுத்தி தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் நான்கு தலங்களாக கட்டப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி பஸ் ஸ்டாண்ட் முதல் தளம் உள்ளிட்ட பல்வேறு தலங்கள் இரவு நேரங்களில் குடிமகன்கள் மற்றும் சமூக விரோதிகளின் ஸ்மார்ட் பாராக மாறி தளங்கள் முழுவதும் காலி மது பாட்டிலாக காணப்படுகிறது.
எனவே மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு பேருந்து நிலையத்தை பொதுமக்களின் வசதிக்காக உடனடியாக திறக்க வேண்டும் இதில் கண்காணித்து பல்வேறு குற்றச்செயல்கள் நடைபெறுவதற்கு முன்பு இதை தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தற்காலிக பேருந்து நிலையத்தில் எந்தவித வசதியும் இல்லாமல் இயங்குவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர் ஆகையினால் விரைவாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்படும் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரையும் கோரிக்கையாக உள்ளது.