தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆடு திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டு ரூ.10,000/- மதிப்புள்ள ஆடு மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி வி.எம்.எஸ் நகரைச் சேர்ந்த எமராஜன் மகன் பால்ராஜ் (40) என்பவருக்கு சொந்தமான ஆடு கடந்த 15.06.2023 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னக்கண்ணுபுரம் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தபோது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் ஆட்டை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி குறிஞ்சி நகரை சேர்ந்த முருகன் மகன் சரவணன் (33), தூத்துக்குடி அண்ணா நகர் மகிழ்ச்சிபுரம் பகுதியை சேர்ந்த குமரேசன் மகன் மணிகண்டன் (29) மற்றும் தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்த சௌந்தரபாண்டியன் மகன் ராமர் (50) ஆகிய 3 பேரும் சேர்ந்து மேற்படி பால்ராஜின் ஆட்டை காரில் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சங்கர் மற்றும் போலீசார் மேற்படி குற்றவாளிகளான சரவணன், மணிகண்டன் மற்றும் ராமர் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 10,000/- மதிப்புள்ள ஆடு மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.