விளாத்திகுளம் பகுதிகளில் ரூ.4.16கோடி புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 12 அரசு கட்டிடங்களை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் ரூ.4 கோடி 16 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சார்நிலைக் கருவூல அலுவலகம், துணை சுகாதார நிலையங்கள், கால்நடை மருத்துவமனை, பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், நியாய விலை கடை மற்றும் கலையரங்கம் உட்பட 12 அரசு கட்டிடங்களை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.4.16 கோடி மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு அரசு கட்டிடங்கள் திறப்பு விழாவானது தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையிலும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முன்னிலையிலும் நடைபெற்றது. அதன்படி, சிவஞானபுரம் கிராமத்தில் ரூ.37.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார மைய கட்டிடமும், ரூ.48.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனை, நமச்சிவாயபுரம் கிராமத்தில் ரூ.28.05 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம், அ. வேலாயுதபுரம் கிராமத்தில் ரூ.28.00 லட்சம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிடம், பிள்ளையார் நத்தம் கிராமத்தில் ரூ.28.01 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிடம், விளாத்திகுளத்தில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சார்நிலைக் கருவூலம் அலுவலக கட்டிடம், வில்வமரத்துப்பட்டி கிராமத்தில் ரூ.28.00 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம், கே.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம், பனையடிப்பட்டி கிராமத்தில் ரூ.28.05 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடம், அயன்பொம்மையாபுரம் கிராமத்தில் ரூ.37.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளார் துணை சுகாதார நிலைய கட்டிடம்,


ஜமீன் கரிசல்குளம் கிராமத்தில் ரூ.09.13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நியாய விலை கடை கட்டிடம் மற்றும் குருவார்பட்டி கிராமத்தில் ரூ.37.22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார மைய கட்டிடம் என பல்வேறு அரசு கட்டிடங்களை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன் ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கேற்றியும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதற்கிடையில் சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டியை அமைச்சர் கீதாஜீவன் வழங்கி மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார்.


இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் ராணி உட்பட பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.