தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பலோடை அரசு பள்ளியைச் சேர்ந்த மாணிக்கராஜ் என்ற ஆசிரியருக்கு அவரது கல்வி சேவையை பாராட்டி இலட்சிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டாதாரி ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆசிரியர் மாணிக்கராஜ் என்பவருக்கு அவரது கல்விச்சேவையை பாராட்டி "அம்பிகா கல்வி அறக்கட்டளை" சார்பில் புதுக்கோட்டையில் நடந்த விழாவில், "இலட்சிய விருது-2023" வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் ஊரகத் திறனாய்வு தேர்வுகளில் ஏராளமான மாணவர்கள் சாதனை படைக்கவும், படிப்பை தொடர முடியாத இடைநிற்றல் மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டல் மூலம் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் மூலமாக உதவிகள் செய்து வருவதற்காகவும், இடைநின்ற மாணவர்களை பள்ளியில் திரும்ப சேர்த்து படிக்க வைத்து அவர்களின் பள்ளிப்படிப்பை நிறைவு செய்ததற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த "இலட்சிய ஆசிரியர் - 2023" விருது பெற்ற ஆசிரியருக்கு வேப்பிலோடை அரசுப் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. இதில் விருது பெற்ற ஆசிரியரை பள்ளியின் தலைமையாசிரியர் சேகர் வரவேற்றுப் பேசினார். ஆசிரியர் கழக தலைவர் முனியசாமி பள்ளி மேலாண்மை குழு தலைவர் உமா சாந்தா மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் வெகுவாக பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி, இலட்சிய ஆசிரியர் விருது பெற்ற இவ்வாசிரியர் கடந்த ஆகஸ்ட் 15 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த ஆசிரியருக்கான விருதினை சுதந்திர தின விழா அன்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது..