விளாத்திகுளம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 250 ஆடுகள் விளாத்திகுளம் தீயணைப்புத் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வடமலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் நூற்றுக்கணக்கான ஆடுகளை வைத்து ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று(29.10.2023) மாலை சக்திவேல் விளாத்திகுளம் அருகே உள்ள மாவிலோடை கிராமத்தில் அமைந்துள்ள பெரிய கண்மாய் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, அதிகமான மழை பெய்ததால், திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததில் சக்திவேல் தனது 250 ஆடுகளுடன் இரவு முழுவதும் கண்மாயிலேயே தவித்து வந்துள்ளார்.

இதைப்பார்த்த மாவிலோடை கிராமத்தைச் சேர்ந்த மக்கள், உடனடியாக விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் கிராம மக்கள், வெளிவர முடியாமல் தண்ணீரில் தவித்துக் கொண்டிருந்த 250 ஆடுகளை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.